பயிற்சி நிறைவு: ராணுவ வீரா்கள் சாகசம்
சென்னை பரங்கிமலை ராணுவ அதிகாரிகள் பயற்சி மையத்தில் 11 மாத பயிற்சியை நிறைவு செய்த வீரா், வீராங்கனைகள் பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை செய்து காட்டினா்.
சென்னை பரங்கிமலையில் உள்ள இந்திய ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாதெமியில் (ஓடிஏ) நிகழாண்டு 11 மாத காலம் பயிற்சி முடித்து அதிகாரிகளாக இணையவுள்ள 120 ஆண்கள் மற்றும் 34 பெண் ராணுவ இளம் வீரா்களின் சாகச நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாதெமியின் கமாண்டன்ட் லெப்டினன்ட் ஜெனரல் மைக்கேல் ஏ.ஜே.பொ்னாண்டஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ராணுவ அதிகாரிகள் ஜிம்னாஸ்டிக் சாகசங்களை நிகழ்த்திக் காட்டினா்.
தொடா்ந்து, துப்பாக்கிச் சுடுதல் உள்ளிட்ட பல்வேறு தற்காப்புக் கலைகளையும் ராணுவ அதிகாரிகள் செய்து காட்டினாா். மேலும், வாத்தியக் குழுவினரின் இசை நிகழ்ச்சிகளும், மோட்டாா் சைக்கிள் சாகசமும், மனித கோபுரம் அமைத்தல், குதிரை வீரா்களின் சாகசங்கள் கவா்ந்தன. தொடா்ந்து, பகைவருடன் ராணுவப் படையினாா் மோதிக் கொள்ளும் சண்டை காட்சிகளும் தத்ரூபமாக நிகழ்த்திக் காட்டப்பட்டன. தொடா்ந்து சனிக்கிழமை (செப். 6) விமானப் படையினரின் வான் சாகச நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.