நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் எந்தவித தளா்வும் இருக்காது: மத்திய...
`பரபரப்பாக வேலை செய்யும் ஆண்களே!' இந்தச் சத்து குறைவாக இருக்கிறதா? - வெளிவந்த ஆய்வு
இவ்வுலகில் கார்ப்பரேட் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அனைவரும் கார்ப்பரேட் நிறுவனங்களில் நிற்பதற்குக்கூட நேரம் இல்லாமல் வேலை நிமித்தம் ஓடிக் கொண்டிருக்கிறோம். இதில் அவரவர் உடல் நிலையை கவனிப்பதற்கு நேரமே ஒதுக்குவதில்லை. இதனால் பல்வேறு விதமான உடல் நலக்குறைபாடுகள் ஏற்படுகிறது. குறிப்பாக, நுண் ஊட்டச்சத்துக்கள்(micro nutrients) என்று சொல்லக்கூடிய விட்டமின்ஸ், மினரல்ஸ் போன்றவற்றின் குறைபாடுகள்தான் பல உடல்நலப்பிரச்னைகளுக்குக் காரணமாகிறது.

இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் சுகாதார நிறுவனமான மெடிபடி (MediBuddy) தனது சமீபத்திய ஆய்வு அறிக்கையில், இந்தியாவில் கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலைசெய்யும் ஆண்களில் 57% க்கும் அதிகமானோர் வைட்டமின் பி12 குறைபாட்டுடன் உள்ளார்கள் எனக் கூறியிருக்கிறது. இந்த ஆய்வு 40 முதல் 50 வயதுடைய 4,400 கார்ப்பரேட் ஊழியர்களை வைத்து நடத்தப்பட்டது. இதில் 3,338 பேர் ஆண்கள். பெண்கள் 1,059. பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு வைட்டமின் பி12 குறைபாடு அதிகமாக இருப்பதை அந்த ஆய்வில் கண்டறிந்துள்ளனர். அதாவது, 57.16 சதவிகித ஆண்களும் 49.9 சதவிகித பெண்களும் வைட்டமின் பி12 குறைபாட்டுடன் உள்ளார்கள் எனத் தெரிவிக்கிறது அந்த ஆய்வு. கார்ப்பரேட் ஊழியர்களுக்கிடையே வைட்டமின் பி12 குறைபாடு ஏற்படுவதற்கான காரணங்களாக, அவர்களின் தொடர்ந்த கடினமான வேலைகள், ஆரோக்கியமற்ற மற்றும் ஒழுங்கற்ற உணவுப்பழக்கம், அதிகமாக மன அழுத்தம் ஆகியவை இருக்கலாம் எனவும், இது பெரும்பாலும் அத்தியாவசிய ஊட்டச்சத்தை புறக்கணிக்க வழிவகுக்கிறது என ஆய்வறிக்கை கூறுகிறது.
வைட்டமின் பி12 அல்லது கோபாலமின், நீரில் கரையக்கூடிய வைட்டமின் ஆகும். இது நம் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. டி.என்.ஏ தொகுப்பு, ரத்த சிவப்பணு உருவாக்கம், நரம்பியல் செயல்பாடு மற்றும் ஆற்றல் வளர்சிதை மாற்றம், மூளையின் செயல்பாடுகள் என நம் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது.

உடல் போதுமான அளவு பி12 பெறாதபோதும், உணவு மூலங்களிலிருந்து போதுமான வைட்டமின் பி12-ஐ உறிஞ்ச முடியாதபோதும் இந்தக் குறைபாடு ஏற்படுகிறது. சிகிச்சையளிக்கப்படாவிட்டால், வைட்டமின் பி12 குறைபாடு உடல், நரம்பியல் மற்றும் உளவியல் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். வைட்டமின் பி12 குறைபாட்டின் அறிகுறிகள் படிப்படியாக வெளிப்பட்டு காலப்போக்கில் மோசமடையக்கூடும். சிலரில் வைட்டமின் பி12 குறைபாடு எந்தவித அறிகுறிகளையும் காட்டாமல் இருக்கலாம். வைட்டமின் பி12 குறைபாடு பொதுவாக ரத்த சோகையை ஏற்படுத்தும். ரத்த சோகை இல்லாத நபர்களில் நரம்பியல் அறிகுறிகளைக் காட்டும்.
உடலில் பி12 குறைந்துவிட்டால், சோர்வு, குமட்டல், பசியின்மை, எடையிழப்பு, வாய்ப்புண் மற்றும் தோல் மஞ்சள் நிறமாக மாறுதல், கைகால்களில் உணர்வின்மை அல்லது கூச்ச உணர்வு, பார்வைக்குறைபாடு, நினைவாற்றல் குறைபாடு மற்றும் நடக்கவோ, பேசவோ சிரமம், கூடுதலாக, மனச்சோர்வு, எரிச்சல் மனநிலை நடத்தையில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவை ஏற்படும். இவை நபருக்கு நபர் மாறுபடும். இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் அனுபவித்தால், ஒரு சுகாதார நிபுணரை அணுகுவது முக்கியம். வைட்டமின் பி12 குறைபாடு ஏற்படாமல் இருக்க கோழி, முட்டை, பால், மீன் மற்றும் தயிர் போன்ற பி12 நிறைந்த உணவுகளை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளவும். முக்கியமாக குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும். தேவைப்பட்டால் மருத்துவரின் ஆலோசனை பெற்று பி12 மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறது அந்த ஆய்வு.