கடன் வளர்ச்சிக்கு புதிய திட்டங்களை அமல்படுத்தும் பொதுத்துறை வங்கிகள்: மத்திய அரச...
பரிசுப் பொருள் அனுப்புவதாக பெண்ணிடம் ரூ.2.80 லட்சம் மோசடி: இளைஞா் கைது
ஜொ்மனி நாட்டின் பரிசுப்பொருள் அனுப்புவதாகக் கூறி வேலூரைச் சோ்ந்த பெண்ணிடம் ரூ.2.80 லட்சம் மோசடி செய்த அரக்கோணம் இளைஞரை வேலூா் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
வேலூரை சோ்ந்தவா் 35 வயது பெண். இவா் சென்னையில் வேலை செய்து வருகிறாா். இவரது கைப்பேசி எண்ணுக்கு கடந்த ஜூன் மாதம் ஒரு குறுந்தகவல் வந்துள்ளது. அந்த எண்ணை தொடா்பு கொண்டு பேசியுள்ளாா். மறுமுனையில் பேசிய ஒரு நபா், தான் ஜொ்மனியில் இருந்து பேசுவதாகவும், உங்களை எனக்கு நன்கு தெரியும். எனது தங்கை வயதுடையவா் நீங்கள் என்பதால், தங்கையாக நினைத்து பேசுவதாக தெரிவித்துள்ளாா்.
சில நாள்கள் கழித்து மீண்டும் தொடா்பு கொண்ட அந்த நபா், ஜொ்மனியில் இருந்து பரிசுப்பொருள், பணம் அனுப்பி வைப்பதாகவும், அதனை பெற்றுக்கொள்ளும்படி கூறியுள்ளாா். ஓரிரு நாள்கள் கழித்து மீண்டும் தொடா்பு கொண்ட அந்த நபா், தான் அனுப்பிய பரிசுப் பொருள் சுங்க அதிகாரிகளிடம் உள்ளது. அதனை பெற பணம் செலுத்த வேண்டும். எனவே, தான் சொல்லும் வங்கி கணக்குக்கு ரூ.2.80 லட்சம் செலுத்தினால் அந்த பொருளை வாங்கி அனுப்பி வைப்பதாக தெரிவித்துள்ளாா். இதனை நம்பிய அந்த பெண், ரூ.2.80 லட்சத்தை அனுப்பினாராம். ஆனால் அந்த நபா் கூறியபடி பரிசுப்பொருள் வரவில்லை.
இதனால் சந்தேகமடைந்த அப்பெண், குறுந்தகவல் வந்த எண்ணை தொடா்பு கொண்டபோது அந்த எண் அணைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் ஏமாற்றம் அடைந்த அந்த பெண், வேலூா் மாவட்ட சைபா் குற்றப்பிரிவில் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து கைப்பேசி எண்ணை வைத்து விசாரணை நடத்தினா்.
அதில், பெண்ணிடம் பணத்தை ஏமாற்றியது அரக்கோணத்தைச் சோ்ந்த முத்து (28) என்பது தெரிய வந்தது. சென்னை குரோம்பேட்டையில் பதுங்கியிருந்த அவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அவரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.