பருவமழை: சமூக வலைதளங்களில் வரும் புகார்களுக்கு நடவடிக்கை - முதல்வரின் அறிவுறுத்தல்கள்!
தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்குவதையொட்டி பருவமழை ஆயத்தநிலை மற்றும் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது.
கூட்டத்தில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என். நேரு, எ.வ. வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், எஸ்.எஸ். சிவசங்கர், பி.கே. சேகர்பாபு, தலைமைச் செயலாளர் முருகானந்தம், காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பேசிய முதல்வர்,
"கடந்த நான்கு ஆண்டுகளில் பல பேரிடர்களைத் திறம்பட எதிர்கொண்டு நாம் கடந்து வந்திருக்கின்றோம். அதற்குக் காரணம் மக்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பதை நம்முடைய முதல் கடமையாக நினைத்துச் செயல்படுவதுதான். இப்போது பருவநிலை மாற்றத்தின் காரணமாக புயல், வெள்ளம், கனமழை போன்ற பேரிடர்கள் எல்லாக் காலங்களிலும் ஏற்படுகின்றன. ஆனால், அந்த இயற்கைச் சீற்றங்களிலிருந்து மக்களைக் காக்க வேண்டிய பெரும் கடமை அரசுக்கும். அரசு அதிகாரிகளான உங்களுக்கும்தான் இருக்கிறது.
இப்போது, நாம் தென்மேற்குப் பருவமழையை எதிர்கொள்ளவிருக்கிறோம். இதில் இயல்பான மழைப்பொழிவுதான் இருக்குமென்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. என்னதான் நிலத்தடி நீர்ப் பெருக்கம், காவிரி டெல்டா வேளாண்மை உள்ளிட்டவற்றுக்கு இந்த மழை துணையாக இருந்தாலும், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஏற்படக்கூடிய கனமழை, திடீர் வெள்ளம், நீலகிரி மலைப் பகுதிகளில் ஏற்படுகிற நிலச்சரிவு போன்ற பாதிப்புகளையும் இதனால் நாம் எதிர்கொள்ளவேண்டியிருக்கும். அதுமட்டுமல்ல, அதிக கனமழை, புயல் ஆகியவற்றை எதிர்கொள்ள கடலோர மாவட்டங்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
தென்மேற்குப் பருவமழை காலத்தைத் திறம்பட எதிர்கொள்ள, அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களும், மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்படுவதையும், தகவல் தொடர்பு சாதனங்களின் பயன்பாட்டையும், மீட்பு உபகரணங்கள் மற்றும் வாகனங்களின் தயார் நிலையையும் உறுதி செய்திடவேண்டும்.
பேரிடர் மீட்பு மையங்கள் தூய்மையாகவும், மின்சாரம், உணவு, குடிநீர் போன்ற வசதிகளோடும் தயார் நிலையில் இருக்க வேண்டும். அதுமட்டுமல்ல; பேரிடர் மேலாண்மைத் திட்டம் தகவல் தொடர்புத் திட்டம் முதல்நிலை மீட்பாளர்களின் பட்டியல் மற்றும் அவர்களுடைய தொலைபேசி எண்கள் அனைத்தையும் சரிபார்த்து வைத்துக்கொள்ள வேண்டும்.
வழக்கமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடந்து, நாம் ப்ரோ-ஆக்டிவாகச் செயல்பட்டால் பேரிடர் காலங்களில் ஏற்படுகின்ற பல பாதிப்புகளைத் தவிர்க்கலாம். அதற்காக நான் சில ஆலோசனைகளைச் சொல்ல விரும்புகிறேன்.
பேரிடர் காலங்களில் மக்கள் தங்களுக்குத் தேவையானவற்றைக் கேட்டும், தங்களுடைய குறைகளைச் சொல்லியும் குரல் எழுப்புவது ஊடகங்களிலேயும், சமூக வலைதளங்களிலேயும்தான்.
எனவே, சோஷியல் மீடியாக்களில், செய்திகளில் வருகிற புகார்களை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், அப்படி எடுக்கப்படுகிற நடவடிக்கைகள் அனைத்து மக்களுக்கும் சென்று சேருகிறதா என்பதைத் திரும்பவும் நீங்கள் ஃபாலோ-அப் செய்ய வேண்டும். குறைகளைச் சொல்கின்ற மக்களிடையேயும், உதவி கேட்கின்ற மக்களிடையேயும் கனிவாக நடந்து கொள்ளுங்கள். அவர்கள் நம்மை நம்பிதான் உதவி கேட்கின்றார்கள் என்ற பொறுப்போடு நீங்கள் நடந்து கொள்ளுங்கள்.
பேரிடர் காலங்களில் ஏற்படுகிற திடீர் மின்வெட்டு மற்றும் அறிவிக்கப்பட்ட மின்வெட்டு மற்றும் மின் பராமரிப்புப் பணிகள் குறித்த தகவல்கள் நுகர்வோருடைய செல்போனுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். அதுமட்டுமல்ல, அவர்கள் பகுதியில் எப்போது மறுபடியும் மின்சாரம் வரும் என்று சேர்த்தே மெசேஜ் அனுப்ப வேண்டும்.
அடுத்து, சாலைப் பணிகள் நடைபெறுகிற காரணங்களினால், சில அசம்பாவிதச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. எனவே, தமிழ்நாடு முழுவதும் அப்படி இருக்கின்ற ஆபத்தான பகுதிகளைக் கண்டறிந்து, அங்கே தகுந்த தடுப்புச் சுவர்கள், தடுப்பு வேலிகள், போதிய வெளிச்சம், ஒளிரும் டைவெர்ஷன் போர்டுகள் போன்றவற்றை வைத்து விபத்துகளைத் தடுக்க வேண்டும்.
அடுத்து மழைக்காலங்களில், நெல் மூட்டைகள் மற்றும் உணவு தானியங்கள் மழையால் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், சேமிப்பு கிடங்குகள் மற்றும் கூடங்களில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். மேலும், நீர்நிலைகளில் ஆகாயத் தாமரைகளை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும், கொசுத் தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
அடுத்து, பெருநகர சென்னை மாநகராட்சியைப் பொருத்தவரைக்கும், இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய மழைநீர் வடிகால், நீர் வழிகால்வாய்கள் மற்றும் குளங்கள் மேம்பாட்டுப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். பருவமழை காலத்துக்குத் தேவையான எல்லா ஆயத்த நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளவேண்டும்.
அடுத்து, நீர்வள ஆதாரத் துறையைப் பொரு த்தவரைக்கும் 17.05.2025 தேதி நிலவரப்படி, மேட்டூர் அணையில் 108.33 அடி உயரத்தில், 76.06 டி.எம்.சி தண்ணீர் இருக்கிறது. எனவே, வரும் ஜூன் 12-ம் நாள் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறப்பதற்குப் போதுமான நீர் இருக்கிறது. காவிரியின் கிளையாறுகள், வாய்க்கால்கள் ஆகியவற்றைத் தூர்வாரி, கடைமடைக்கும் தண்ணீர் கொண்டு சென்று, குறுவை சாகுபடியை செம்மையாகச் செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அடுத்து, வேளாண்மை-உழவர் நலத்துறையைப் பொறுத்தவரையில், தென்மேற்குப் பருவமழையை எதிர்பார்த்து கார், குறுவை, சொர்ணவாரி பருவங்களில் பயிர் சாகுபடி மேற்கொள்ள பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகள் செய்யப்பட்டிருக்கின்றன. எனவே, தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
தென்மேற்கு பருவமழை மற்றும் மேட்டூர் அணையின் நீர் திறப்பு ஆகியவற்றால் குறுவை சாகுபடி அதிகளவில் இருக்குமென்று எதிர்பார்க்கப்படுவதால், வேளாண் பெருமக்களுக்குத் தேவையான விதைகள், உரங்கள் உள்ளிட்ட எல்லா இடு பொருட்களும் உரிய காலத்தில் கிடைப்பதையும், குறுவை சிறப்புத் தொகுப்பு திட்டத்தினுடைய பயன்கள் முழுமையாக விவசாமிகளைச் சென்றடைவதையும் உறுதி செய்திட, வேளாண் கள அலுவலர்கள் முழு முனைப்போடு பணியாற்ற வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். அதுமட்டுமல்ல, மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்கப்படுவதற்கு முன்பாகவே, கடைமடைப் பகுதிக்கும் தண்ணீர் சென்று கிடைப்பதற்கு ஏதுவாக கால்வாய்கள் தூர்வாரப்பட வேண்டும்.
எதிர்வரும் தென்மேற்கு பருவமழை காலத்தில் உயிரிழப்பு, பொருள் மற்றும் உட்கட்டமைப்பு சேதம் எதுவும் இல்லாமல், நல்ல முறையில் பருவமழை காலத்தைக் கடந்து செல்ல அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அனைத்து அரசு ஊழியர்களும் முழு முனைப்போடு பணியாற்ற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.
முதல்வர் உரையாற்றியதற்கு பிறகு, தென்மேற்கு பருவமழை ஆயத்த நிலை மற்றும் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு குறித்து விளக்கப் படத்தின் மூலம் வருவாய்த் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் விளக்கினார்.
பின்னர், நகராட்சி நிருவாகத் துறை, வருவாய்த் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை, நீர்வள ஆதாரத் துறைகளைச் சார்ந்த செயலாளர்கள், காவல் துறை தலைமை இயக்குநர் ஆகியோர், தங்களது துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் எடுத்துரைத்தனர்.