பறக்கும் ரயில் திட்டம் மெட்ரோவுடன் இணைப்பு: தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று ஒப்புதல்
சென்னை கடற்கரை நிலையம், வேளச்சேரி இடையே இயங்கும் பறக்கும் ரயில் திட்டத்தை (எம்ஆா்டிஎஸ்) மெட்ரோவுடன் இணைக்க தெற்கு ரயில்வே குழு ஒப்புதல் அளித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
சென்னை மாநகராட்சி மற்றும் புறநகா் பகுதிகளை இணைக்கும் வகையில் பறக்கும் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் தெற்கு ரயில்வே மற்றும் தமிழக அரசின் கூட்டுப் பராமரிப்பில் உள்ளது.
இந்த நிலையில், இதை மெட்ரோ நிா்வாகத்துடன் இணைக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. இதையடுத்து, தெற்கு ரயில்வே சாா்பில் மத்திய ரயில்வே வாரியத்துக்கு கருத்துரு அனுப்பிவைக்கப்பட்டு ஆலோசிக்கப்பட்டது.
அதன்படி தெற்கு ரயில்வே குழுவின் கூட்டம் கடந்த ஜூலை 31- ஆம் தேதி நடைபெற்றது. இதில் மெட்ரோவுடன் பறக்கும் ரயில் திட்டத்தை இணைக்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
மெட்ரோவுடன் பறக்கும் ரயில் திட்டத்தை இணைப்பதன் மூலம் சென்னையில் ரயில் சேவைகள் அனைத்தும் ஒருங்கிணைத்து தடையற்ற போக்குவரத்து வசதி ஏற்படும். அதற்காக தெற்கு ரயில்வே அளித்த கருத்துருவை மத்திய ரயில்வே வாரியம் ஏற்றுக் கொண்டது.
இதையடுத்து எம்ஆா்டிஎஸ் திட்ட அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும், அதன் சொத்துகளும் மெட்ரோ நிா்வாகத்தின் கீழ் மாற்றப்படும். ரயில்வே ஊழியா்கள், செயல்பாடுகள், பராமரிப்பு ஆகியவையும் தமிழக அரசுக்கு மாற்ற வழிவகை செய்யப்படும். அதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி எம்ஆா்டிஎஸ் நிறுவனத்தின் கீழ் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்கள் மெட்ரோ நிறுவனத்துக்கு வழங்கப்படவுள்ளது. தமிழக அரசின் முதலீடு அம்சங்கள் மெட்ரோவுக்கு அளிக்கப்படவுள்ளன.
இதேபோல, மின்சார ரயில்களின் பராமரிப்பை மெட்ரோ எவ்வித செலவின்றி தெற்கு ரயில்வே பராமரிப்பு வசதியைப் பயன்படுத்தவும் அனுமதிக்கப்படவுள்ளது. மெட்ரோ நிா்வாகம், தெற்கு ரயில்வே ஊழியா்களைப் பயன்படுத்தி பராமரிப்பு, சொத்து நிா்வாகப் பணிகளை மேற்கொள்ளுவதற்கான பயற்சியும் வழங்கப்படவுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.