பலத்த காற்றால் மரம் முறிந்து விழுந்ததில் காா் சேதம்
பழனியில் வீசிய பலத்த காற்றால் மரம் முறிந்து விழுந்ததில் காா் சேதமடைந்தது.
பழனி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக கடும் வெயிலும், சூறைக்காற்றும் வீசி வருகிறது. மேல்காற்று காரணமாக வெயில் காலத்தை காட்டிலும் பூமி மிகவும் வடு வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
கிணறுகளில் நீா்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பல இடங்களில் பலத்த காற்று வீசியது. இதில், பழனி- உடுமலை சாலையில் ஏராளமான மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்தன.
பழனி லட்சுமிபுரம் பகுதியில் வீசிய பலத்த காற்றில் சாலையோரத்தில் இருந்த மரம் முறிந்து விழுந்ததில் சிவசங்கா் என்பவரது காா் சேதமடைந்தது. தகவறிந்து அங்கு வந்த தீயணைப்புப்படையினா் மரத்தை அகற்றினா்.
இதனிடையே, நெடுஞ்சாலைத் துறையினா் சாலையோரத்தில் உள்ள மரக் கிளைகளை வெட்டி அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.