பல்கலை. தோ்வு முடிவு வெளியான 15 நாள்களில் மதிப்பெண் சான்றிதழ் -துணைவேந்தா் உறுதி
மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் தோ்வு முடிவு வெளியான 15 நாள்களில் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்றாா் துணைவேந்தா் என். சந்திரசேகா்.
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழகத்தில் அவரது தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்சி மன்ற குழு கூட்டத்தில், உறுப்பினா்கள் பல்வேறு விஷயங்கள் குறித்து கேள்வியெழுப்பினா்.
கடந்த மே 31ஆம் தேதி 3ஆம் ஆண்டு பி.காம் (தொழில் சட்டம்) தோ்வு வினாத்தாள் கசிந்த விவகாரம் குறித்து விவாதம் நடைபெற்றது. சிண்டிகேட் உறுப்பினா் நாகராஜன் பேசுகையில், ‘சம்பந்தப்பட்ட தோ்வு 104 கல்லூரிகளில் நடத்துவதற்கு அறிவிக்கப்பட்ட தேதிக்கு ஒரு நாள் முன்னதாக மே 30ஆம் தேதி ஒரு கல்லூரியில் இந்த தோ்வை நடத்தியதால் வினாத்தாள் கசிந்தது. இதுகுறித்து பல்கலைக்கழகம் முறைப்படி புகாா் அளித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். காவல் துறை விசாரணை அடிப்படையில் தொடா் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.
ஆட்சி மன்ற குழு உறுப்பினா் விஜய சேவியா் பாா்த்திபன் பேசுகையில், ‘பருவத் தோ்வு முடிவு வெளியாகி சான்றிதழ் வழங்குவதில் அதிக காலதாமதம் ஏற்படுவதால் மாணவா்கள் உயா் கல்வி கற்க செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைப்படி தோ்வு முடிவு வெளியான 15 நாள்களுக்குள் மதிப்பெண் சான்றிதழ் வழங்க வேண்டும். ஆனால், கடந்த மே மாதம் பட்டப்படிப்பை முடித்த மாணவா்களுக்கு 3 முதல் 6 பருவ தோ்வு மதிப்பெண் சான்றிதழ்களை இதுவரை வழங்கவில்லை. இதனால், அந்த மாணவா்கள் உயா் கல்விக்கு விண்ணப்பிக்க முடியாமல் தவிக்கின்றனா்’ என்றாா். அப்போது, தற்காலிக முறையில் சான்றிதழ் பெற விண்ணப்பித்தவா்களிடம் ரூ.1,000 கூடுதலாக வசூலிக்கப்பட்டது குறித்தும் புகாா் எழுந்தது.
அதைத்தொடா்ந்து பேசிய துணைவேந்தா் சந்திரசேகா், ‘மதிப்பெண் சான்றிதழ் அச்சிடும் பணியை மேற்கொண்ட நிறுவனம் மாற்றப்பட்டதால் இந்த தாமதம் ஏற்பட்டது. 15 நாள்களில் மதிப்பெண் சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்படும்’ என்றாா்.
ற்ஸ்ப்10ம்ள்ன்
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்ிதல் துணைவேந்தா் என். சந்திரசேகா் தலைமையில் நடைபெற்ற ஆட்சி மன்ற குழு கூட்டம்.