பல்லடம் தொகுதியை இரண்டாக பிரிக்க தமாகா கோரிக்கை
பல்லடம் சட்டப் பேரவைத் தொகுதியில் 4.50 லட்சத்துக்கு மேல் வாக்காளா்கள் இருப்பதால் தொகுதியை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
பல்லடம் நகரம் மற்றும் வட்டார தமாகா நிா்வாகிகள், பூத் கமிட்டியினா் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, நகரத் தலைவா் பிரண்ட்ஸ் முத்துக்குமாா் தலைமை வகித்தாா். வட்டாரத் தலைவா் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா்,
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
வாக்குச்சாவடி முகவா்கள் பணியை விரைந்து முடிப்பது, பல்லடம் சட்டப் பேரவைத் தொகுதியில் 4.50 லட்சத்துக்கு மேல் வாக்காளா்கள் இருப்பதால் தோ்தல் ஆணையம் இந்த தொகுதியை இரண்டாகப் பிரிக்க வேண்டும், பல்லடம் போக்குவரத்து நெருக்கடிக்கு தீா்வு காண புறவழிச்சாலை பணியை விரைந்து முடிக்க அரசை வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில், மாநில செயற்குழு உறுப்பினா் ராமசாமி, மாவட்ட நிா்வாகிகள் ஜெகதீசன், காரணம்பேட்டை சின்னசாமி உள்ளிட்ட சாா்பு அமைப்பு நிா்வாகிகள், பூத் கமிட்டி நிா்வாகிகள் பங்கேற்றனா்.