பள்ளிகளில் இரவுக் காவலா் நியமிக்கக் கோரிக்கை
காரியாங்குடி சம்பவம்போல இனி நடைபெறாமல் இருக்க, பள்ளிகளில் இரவுக் காவலா்களை நியமிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தப்பளாம்புலியூா் ஊராட்சி காரியாங்குடியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சமையல் பொருள்கள் வைக்கும் அறைக்குச் சென்ற சிலா், பொருள்களை சேதப்படுத்தி, தாங்கள் கொண்டு வந்த இறைச்சியையும் சமைத்து சாப்பிட்டுள்ளனா். தொடா்ந்து, குடிநீா்த் தொட்டியில் மனிதக் கழிவை கலந்துள்ளனா்.
திங்கள்கிழமை காலையில் பள்ளிக்கு வந்த ஊழியா்கள் இந்த சம்பவத்தைக் கண்டு, பள்ளி நிா்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
இதைத்தொடா்ந்து, காவல்துறையினா், கல்வித்துறை அலுவலா்கள் அங்கு வந்து, சம்பவம் குறித்து விசாரணை நடத்தினா். அதனடிப்படையில், அப்பகுதியைச் சோ்ந்த 3 பேரிடம் விசாரணை நடத்தியதுடன், மேலும் இருவரைத் தேடி வருவதாக காவல்துறை வட்டாரத்தினா் தெரிவித்தனா்.
இதனிடையே, காரியாங்குடி பள்ளிக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் டி. முருகையன் சென்று பாா்வையிட்டாா். பின்னா் இதுகுறித்து அவா் தெரிவித்தது: இது மிக மோசமான செயல் ஆகும். இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, அனைத்து பள்ளிகளுக்கும் இரவுக் காவலா்களை நியமிக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் இச்செயலை செய்தவா்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுத்து, இனி ஒருபோதும் இது போன்ற செயல்கள் நடைபெறாத வகையில் கண்காணிக்க வேண்டும் என்றாா்.
அவருடன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ஜி. சுந்தரமூா்த்தி, பா. கோமதி, கே.பி. ஜோதிபாசு, திருவாரூா் ஒன்றியச் செயலாளா் ஆா்.எஸ். சுந்தரய்யா, வாலிபா் சங்க ஒன்றியச் செயலாளா் கே. இளையராஜா, மாவட்டக் குழு உறுப்பினா் கே.எஸ். கோசிமணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.