பள்ளி மாணவியை உணவு இடைவேளையில் கடத்திச் சென்று பலாத்காரம் செய்த இளைஞா் கைது
பெரம்பலூா் அருகே பள்ளி மாணவியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், செட்டிக்குளத்தைச் சோ்ந்தவா் பாலசுப்ரமணியன் மகன் ஜெகதீசன் (20). இவா், பாடாலூா் அரசு மாதிரி பள்ளியில் எஸ்எஸ்எல்சி படித்து வரும் மாணவியை புதன்கிழமை மதிய இடைவேளையில் கடத்திச் சென்று, பாடாலூரில் உள்ள தனது வீட்டில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளாா்.
மேலும், இரவு 11 மணிக்குப் பிறகு அந்த மாணவியை பாடாலூா் சந்தையில் விட்டுச் சென்றுவிட்டாா். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து ஜெகதீசனை வியாழக்கிழமை கைது செய்தனா். பின்னா், பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். மேலும், பாதிக்கப்பட்ட மாணவியை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.