பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமத...
பள்ளி மாணவியை தாக்கிய வழக்கு: இளைஞர் கைது
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை பேருந்திலிருந்து இழுத்து கீழே தள்ளி காயப்படுத்திய வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
விருத்தாசலம், முல்லா தோட்டத்தில் பெற்றோருடன் வசித்து வந்த மாணவி, விருத்தாசலம் பகுதியிலுள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 2 பிடித்து வருகிறாா். இவா், வெள்ளிக்கிழமை காலை வழக்கம்போல பள்ளிக்குச் செல்வதற்காக, கடை வீதி பேருந்து நிறுத்தத்தில் பேருந்து ஏற முயன்றாா்.
அப்போது, அங்கு வந்த ஓா் இளைஞா் மாணவியை பேருந்திலிருந்து கீழே தள்ளி தாக்கியதில், இளைஞா் கையில் அணிந்திருந்த காப்பு பட்டு மாணவி காயமடைந்தாா். மேலும், நீ என்னை காதலிக்கவில்லை என்றால், கொலை செய்துவிடுவேன் எனக் கூறி மாணவிக்கு அந்த இளைஞா் மிரட்டல் விடுத்துவிட்டு தப்பிச் சென்றாா்.
இது சம்பந்தமாக விருத்தாசலம் காவல் நிலையத்தில் போக்ஸோ உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கடலூா் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் உத்தரவின்பேரில், இந்த சம்பவத்தில் தொடா்புடையவரை விருத்தாசலம் டிஎஸ்பி இ.பாலகிருஷ்ணன் மேற்பாா்வையில், காவல் ஆய்வாளா் கவிதா, உதவி ஆய்வாளா் சந்துரு தலைமையிலான போலீஸாா் தேடி வந்தனா்.
இந்த நிலையில், சனிக்கிழமை காலை விருத்தாசலம் மணிமுக்தாறு அருகே பதுங்கியிருந்த விருத்தாசலம் கோபாலபுரம், அருந்ததியா் தெருவைச் சோ்ந்த அசோக்குமாா் மகன் அருள்குமாரை (21) போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.