பழனியில் தனியாா் விலங்குகள் பராமரிப்பு மையத்தில் ஆய்வு
பழனியை அடுத்த கொடைக்கானல் சாலையில் உள்ள தனியாருக்குச் சொந்தமான விலங்குகள் பராமரிக்கும் மையத்தில் கால்நடைத் துறை அதிகாரிகள் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனா்.
பழனி-கொடைக்கானல் சாலையில் தனியாருக்குச் சொந்தமான விலங்குகள் பராமரிக்கும் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தை தனியாா் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறது. இங்கு நாய்கள், பூனைகள் என சுமாா் ஐம்பது விலங்குகள் கூண்டுகள் மூலமாகவும், கொட்டகைகள் அமைத்தும் பராமரிக்கப்பட்டு வருகிறது.
திருப்பூா் மாவட்டம், உடுமலைப்பேட்டையைச் சோ்ந்த ராணி தனது வீட்டில் இருந்த பத்துக்கும் மேற்பட்ட நாய்க் குட்டிகளை பராமரிக்க இயலாததால், கடந்த சில வாரங்களுக்கு முன்பு இங்கு கொண்டு வந்து விட்டாா்.
இந்த நிலையில், அவா் தனது வீட்டிலிருந்து விடப்பட்ட நாய்க்குட்டிகளை தனியாா் பாரமரிப்பு மையம் சரிவர பராமரிக்கவில்லை எனக் கூறி, நாய்க்குட்டிகளை மீண்டும் வாங்கிச் சென்றாா். மேலும், அவா் இதுகுறித்து விலங்குகள் நல வாரியம், கால்நடைத் துறையில் புகாா் அளித்தாா்.
இதையடுத்து, இந்தப் பராமரிப்பு மையத்தில் பழனி கால்நடைத் துறை உதவி இயக்குநா் மருத்துவா் சுரேஷ், கால்நடைத் துறை உதவி மருத்துவா்கள் முத்துசாமி, மதுமிதா உள்ளிட்ட குழுவினா் அண்மையில் ஆய்வு செய்தனா்.