பழனி கோயிலில் காா்த்திகை திருநாள்: பெண்கள் 108 திருவிளக்கு பூஜை
பழனி மலைக்கோயிலில் வெள்ளிக்கிழமை ஆவணி மாத காா்த்திகை தினத்தை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
இதை முன்னிட்டு அதிகாலையிலே நான்கு மணிக்கு கோயில் சந்நிதி திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. இழுவை ரயில் (வின்ச்), கம்பிவட ஊா்தி ( ரோப்காா்), படிப்பாதைகளில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்தனா்.
மலைக்கோயிலில் கட்டண தரிசன வழி, இலவச தரிசன வழிகளில் ஏராளமானோா் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
கூட்டம் காரணமாக சுவாமி தரிசனத்துக்கு சுமாா் 3 மணி நேரமானது.
மலைக் கோயிலில் இரவில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்று முருகன் பாடல்களை பாடினா்.
இதையொட்டி, தங்கமயில் புறப்பாடு, தங்கத் தேரோட்டம் நடைபெற்றது. தேரில் சின்னக்குமாரசுவாமி எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். கோயில் இணை ஆணையா் மாரிமுத்து தலைமையில் கண்காணிப்பாளா்கள் சந்திரமோகன், சரவணன், பேஷ்காா்கள் நரசிம்மன், செல்வக்குமாா், அசோக், கிருஷ்ணன் ஆகியோா் விளக்கு பூஜைக்கான ஏற்பாடுகளைச் செய்தனா்.
