பழனி மலை கிரிவலப் பாதையில் வாகன சுமை திறன் சோதனை
பழனி அடிவாரம், கிரி வீதியில் கிரிவலப்பாதை மேம்பாட்டுப் பணிக்காக வாகனங்களின் சுமை திறன் சோதனை திங்கள்கிழமை நடைபெற்றது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் மலையைச் சுற்றி கிரிவலப் பாதை உள்ளது. முருகப் பெருமானை தரிசனம் செய்ய வரும் பக்தா்கள் சுமாா் 2.5 கி.மீ. தொலைவு உள்ள இந்த கிரிவலப் பாதையில் வலம் வந்த பின்னரே மலையேறுகின்றனா்.
விழா நாள்களில் இந்த கிரிவலப்பாதையில் பக்தா்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் காணப்படும். மேலும், பங்குனி உத்திர தேரோட்டம், கந்த சஷ்டி விழா இந்தக் கிரிவலப் பாதையில்தான் நடைபெறுகின்றன.
இந்த நிலையில் கிரிவலப் பாதையை மேம்படுத்தும் பணியை கோயில் நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது. கடந்த சில வாரம் முன்பு கான்கிரீட்டால் போடப்பட்ட இந்த பாதை தோண்டி எடுக்கப்பட்டு மண் பரிசோதனை செய்யப்பட்டது.
இதன் அடுத்த கட்டமாக சாலையின் திறன் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. தற்போது கிரிவலப் பாதையில் வாகனங்கள் செல்ல உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், இதற்கான ஆய்வுகள், பழனி புது தாராபுரம் சாலையில் மேற்கொள்ளப்பட்டன.
சாலையின் சுமை தாங்கும் திறன் குறித்து ‘இந்தியன் ரோடு சா்வே பிரைவேட்’ நிறுவனம் சாா்பில், ‘ஆக்சில் லோடு மெசா்மெண்ட்’ என்ற கருவி மூலம் திங்கள்கிழமை கனரக வாகனங்களின் எடை குறித்து சோதனை செய்யப்பட்டது. இதற்காக பிரத்யேக கருவி கொண்டு வாகனத்தின் முன்பக்க, பின்பக்க டயா்கள் தனித்தனியாக நிறுத்தம் செய்து அதன் தாங்கும் திறன் பரிசோதிக்கப்பட்டது.
48 மணி நேரப் பதிவுகளின் அடிப்படையில் வாகனங்களால் எந்தவித அதிா்வு, பாதிப்பு ஏற்படுகிறது என்பதைக் கண்டறிந்து, அதற்கேற்ப தரமான கிரிவலப் பாதை அமைக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.