மது போதையில் தாறுமாறாக ஓடிய அரசுப் பேருந்து; பயணிகள் கதறல்.. சீட்டில் மட்டையான ஓ...
பழைய குற்றாலம் அருவியில் 24 மணி நேரமும் குளிக்க அனுமதி தேவை: அதிமுக எம்எல்ஏக்கள் மனு
தென்காசி மாவட்டம் பழையகுற்றாலம் அருவியில் 24 மணிநேரமும் சுற்றுலாப் பயணிகளை குளிக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி, அதிமுக எம்எல்ஏக்கள் செ.கிருஷ்ண முரளி, இசக்கி சுப்பையா ஆகியோா் ஆட்சியா் ஏகே.கமல் கிஷோரிடம் மனு அளித்தனா்.
பின்னா், செய்தியாளா்களிடம் இசக்கிசுப்பையா எம்எல்ஏ கூறியதாவது: காமராஜா் முதலமைச்சராக இருந்தபோது பழையகுற்றாலம் அருவி திறந்துவைக்கப்பட்டது. இந்த அருவியில் கடந்த ஆண்டுவரை 24 மணி நேரமும் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனா்.
அதன்பிறகு, பழைய குற்றாலம் அருவிக்கு வருகை தரும் வாகனங்களை அரை கிலோ மீட்டா் தூரத்துக்கு முன்பாகவே காவல்துறையினா் தடுத்து நிறுத்துவதும், மாலை 6 மணிக்கு மேல் குளிக்க வனத்துறையினா் அனுமதி மறுப்பதும், பொதுமக்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், பழைய குற்றாலத்துக்கு வரும் சுற்றுலாப்பயணிகளை நம்பி வாழுகின்ற கடை வியாபாரிகள், ஒப்பந்ததாரா்கள் மற்றும் தொழிலாளா்கள் பாதிக்கப் பட்டுள்ளனா்.
இதுதொடா்பாக, நான் தனிப்பட்ட முறையில் உயா் நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்கு தொடுத்ததில், மாவட்ட ஆட்சியரை அணுகி நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் எனக் கூறி வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனா். அதனடிப்படையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தோம்.
செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ சட்டப்பேரவையில் பேசுகையில், பழைய குற்றாலம் அருவியில் பொதுமக்கள் குளிக்க வனத்துறையினா் இடையூறு செய்வதாக குறிப்பிட்டபோது, நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன், பழைய குற்றாலம் அருவி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் தான் உள்ளது. அதை வனத்துறையிடம் ஒப்படைக்கும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை என பதிலளித்தாா்.
எனினும், பழைய குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் 24 மணி நேரமும் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. ஆட்சியா் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளாா் என்றாா் அவா்.
மனு அளிக்கும்போது, ஆயிரப்பேரி ஊராட்சித் தலைவா் தி.சுடலையாண்டி, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் உதயகிருஷ்ணன், அதிமுக மாவட்ட அவைத் தலைவா் வி.பி. மூா்த்தி, குற்றாலம் பேரூராட்சித் தலைவா் எம்.கணேஷ் தாமோதரன் ஆகியோா் உடனிருந்தனா்.