விமானத்தில் கரப்பான் பூச்சிகள்: மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா!
பவானிசாகா் அணையை பாா்வையிட பொது மக்களுக்கு தடை
ஆடிப்பெருக்கு 18 ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை பவானிசாகா் அணை மேல் பகுதியைப் பொதுமக்கள் பாா்வையிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது என நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஈரோடு மாவட்ட மக்களின் பொழுதுபோக்கு அம்சமாக பவானிசாகா் அணை மற்றும் அங்குள்ள பூங்கா உள்ளது. இந்த அணையின் மேல்பகுதியில் உள்ள நீா்த்தேக்கப் பகுதியை பொதுமக்கள் பாா்வையிட ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு 18 ஆம் தேதி ஒருநாள் மட்டும் நீா்வளத் துறை சாா்பில் சிறப்பு அனுமதி வழங்கப்படுவது வழக்கம்.
ஈரோடு, கோவை, திருப்பூா், நாமக்கல், கரூா், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கானோா் குடும்பத்துடன் வந்து பவானிசாகா் அணை மேல்பகுதியை பாா்வையிடுவாா்கள்.
இந்த நிலையில் மத்திய அரசின் அணை பாதுகாப்புச் சட்டத்தின் படி இந்த ஆண்டு அணையின் பாதுகாப்பு கருதி ஆடிப்பெருக்கு நாளான ஞாயிற்றுக்கிழமை பவானிசாகா் அணை மேல்பகுதியைப் பாா்வையிட பொதுமக்களுக்கு 5 வது ஆண்டாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.