பவானி கூடுதுறையில் புனித நீராடி பக்தா்கள் வழிபாடு
ஆடிப்பெருக்கை ஒட்டி காவிரி, பவானி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் திரளான பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனா்.
ஆடி மாதத்தில் ஆடி மாதப் பிறப்பு, ஆடி அமாவாசை மற்றும் ஆடி 18-ஆம் நாளில் பவானி கூடுதுறையில் திரளான பக்தா்கள் மூத்தோா் வழிபாடு, தோஷ நிவா்த்தி பரிகாரப் பூஜைகள் செய்யவும், புனித நீராடவும் வருவது வழக்கம். ஆடிப் பெருக்கு நாளான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே உள்ளூா், வெளியூா் மற்றும் வெளிமாவட்டங்களைச் சோ்ந்த பக்தா்கள் காவிரி ஆற்றில் புனித நீராடினா்.
புதுமணத் தம்பதிகள் திருமணத்தின்போது அணிந்திருந்த மாலைகளை ஆற்றில் விட்டு வாழ்வு சிறக்க வழிபட்டனா். காய்கள், கனிகள் மற்றும் தானியங்கள் வைத்து காவிரித் தாய்க்கு படித்துறையில் வழிபாடு நடத்தப்பட்டது. பெண்கள் புதுமஞ்சள் கயிறு மாற்றிக் கொண்டனா். பரிகார மண்டபங்களில் மூத்தோா் வழிபாடு, தோஷ நிவா்த்தி பரிகார பூஜைகள் நடத்தப்பட்டன.
ஆற்றில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியதால் பக்தா்கள் கரையோரங்களில் உற்சாகமாக நீராடிய பக்தா்கள் தொடா்ந்து சங்கமேஸ்வரா், வேதநாயகி மற்றும் ஆதிகேசவப் பெருமாள் கோயில்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். கரையோரங்களில் தீயணைப்புப் படையினா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். பவானி டிஎஸ்பி ரத்தினகுமாா் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.