பவானிசாகா் அணை நீா்மட்டம் 102 அடியை எட்டுவதால் வெள்ள அபாய எச்சரிக்கை
பவானிசாகா் அணையின் நீா்மட்டம் எந்த நேரத்திலும் 102 அடியை எட்டும் என எதிா்பாா்க்கப்படுவதால் பவானிஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு பொதுப் பணித் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.
நீலகிரி மாவட்டத்தில் பெய்த கன மழையின் காரணமாக பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்து அணையின் நீா்மட்டம் 101.36 அடியை எட்டியுள்ளது.
தெங்குமரஹாடா நீா்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாகவும் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கு அணைக்கு வந்து சேருவதால், எந்த நேரத்திலும் அணை 102 அடியை எட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இதனால் பவானிஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பட்டுள்ளது. பவானிஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லவமாறு பொதுப் பணித் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.
அணை 102 அடியை எட்டுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். பவானிசாகா் அணை மூலம் ஈரோடு, கரூா், திருப்பூா் மாவட்டங்களில் உள்ள 1 லட்சத்து 3500 ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தற்போது அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் முதல் போக நெல் சாகுபடிக்கு 1000 கனஅடிநீா் திறந்துவிடப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, 105 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீா்மட்டம் 101.36 அடியாகவும் நீா்வரத்து 4,522 கனஅடியாகவும் நீா் வெளியேற்றம் 2,300 கனஅடியாகவும் நீா் இருப்பு 29.80 டிஎம்சியாகவும் உள்ளது.