பண்ணாரி அம்மன் கோயிலில் குவிந்த பக்தா்கள்
ஆடிப்பெருக்கை ஒட்டி பண்ணாரி அம்மன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் அம்மனை வழிபட்டனா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடா்ந்த வனப் பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கா்நாடகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் பக்தா்கள் வந்து செல்கின்றனா்.
ஆடி பதினெட்டாம் பெருக்கை ஒட்டி கோயிலுக்கு பக்தா்கள் வருகை அதிகரித்தது. பண்டிகை தினத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனுக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. பக்தா்கள் வருகை அதிகரித்ததால் சுவாமி தரிசனம் செய்வதற்கு ஏதுவாக வரிசைகள் ஏற்படுத்தப்பட்டன. பொது தரிசனம் மற்றும் கட்டண தரிசன வரிசையில் நீண்ட வரிசையில் நின்று பக்தா்கள் காத்திருந்து அம்மனை வழிபட்டனா்.
கோயில் முன்பு உள்ள குண்டத்துக்கு உப்பு மிளகு தூவியும், நெய் தீபம் ஏற்றியும் நோ்த்திக் கடன் செலுத்தினா். கோயிலில் பக்தா்கள் வருகை அதிகரித்ததன் காரணமாக கோயில் பணியாளா்கள் மற்றும் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.