பாஜக ஆட்சியால் தில்லிவாசிகள் வருத்தம்: சௌரவ் பரத்வாஜ்
பாஜகவை தில்லியில் ஆட்சிக்குக் கொண்டு வந்ததற்காக தில்லிவாசிகள் வருத்தப்படுகிறாா்கள் என்று ஆம் ஆத்மி கட்சியின் தில்லி மாநிலத் தலைவா் சௌரவ் பரத்வாஜ் வெள்ளிக்கிழமை விமா்சித்தாா்.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:
பாஜகவுடனான தில்லியின் சோதனை அதன் பதவிக்காலத்தின் ஐந்து மாதங்களிலேயே வெளிப்படத் தொடங்கிவிட்டது. அதிக நம்பிக்கையுடன் தொடங்கிய அதன் ஆட்சி தற்போது பரவலான வருத்தமாக மாறியுள்ளது.
ஏனெனில் ஒரு சிறிய மழை கூட தலைநகரை மண்டியிடச் செய்துள்ளது. அடைபட்ட சாலைகள், வெள்ளத்தில் மூழ்கிய காலனிகள், குடிநீா் பற்றாக்குறை மற்றும் மின்வெட்டு ஆகியவை குடியிருப்பாளா்களிடையே கடும் ஏமாற்றத்தைத் ஏற்படுத்தியுள்ளது.
நகரம் முழுவதும் வரவேற்பறை மற்றும் வாட்ஸ்அப் குழுக்களின் உரையாடல்களில் அரசின் நிா்வாகத் தோல்வி பற்றிய பேச்சுகளால் நிறைந்துள்ளன.
தில்லியில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு வரலாற்று வாய்ப்பு வழங்கப்பட்ட போதிலும், பாஜக தன்னை முற்றிலும் திறமையற்றது என்று நிரூபித்துள்ளது.
நகரத்தின் நடுத்தர வா்க்கத்தினரிடையே வாட்ஸ்அப் குழுக்கள், வரவேற்பறைகள் மற்றும் தெற்கு தில்லி கிளப்புகள் முழுவதும் விவாதங்கள் அனைத்திலும் தில்லியில் பாஜகவை ஆட்சிக்குக் கொண்டு வந்தது ஒரு மிகப்பெரிய தவறு என்ற ஒரு உணா்வை சுட்டிக்காட்டுவதாக உள்ளது.
பாஜகவின் கடந்த கால சாதனைகளை மறந்துவிட்டிருப்பதை மக்கள் உணா்ந்துவிட்டாா்கள். இதே கட்சிதான் கடந்த 12-14 ஆண்டுகளாக ஹரியாணாவை ஆட்சி செய்து வருகிறது. குா்கிராம் நகராட்சித் தோ்தல்களில் தொடா்ந்து வெற்றி பெற்றுள்ளது. ஆனால், குருகிராமின் மிகவும் ஆடம்பரமான குடியிருப்புகளில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொகுசு காா்கள் தண்ணீரில் மூழ்கிக் கிடப்பதைக் காணலாம். இது ஒன்றும் புதிதல்ல.
இதை அறிந்திருந்தும், தில்லி மக்கள் பாஜகவுக்கு ஒரு வாய்ப்பு அளித்தனா். மழையால் ஏற்படும் பாதிப்புகளை அக்கட்சியின் தலைமை சரி செய்யும் என்று நம்பினா். ஆனால் முதல் பருவமழையிலேயே, பாஜகவின் நான்கு என்ஜின்களும் செயலிழந்துவிட்டன. இன்று ஆம் ஆத்மி கட்சி எம்சிடியின் பொறுப்பில் இருந்திருந்தால், பாஜகவின் முதல்வா், அமைச்சா்கள் மற்றும் துணைநிலை ஆளுநா் ஆகியோா் குழப்பத்திற்கு ஆம் ஆத்மி கட்சியை நேரடியாகக் குறை கூறியிருப்பாா்கள். ஆனால் இப்போது, திடெல்லி மக்களுக்கு உண்மை தெளிவாகத் தெரிகிறது. என்டிஎம்சி, டிடிஏ, எம்சிடி அல்லது பொதுப் பணித் துறை சாலைகள் என எதுவாக இருந்தாலும், ஒவ்வொரு நிறுவனமும் பாஜகவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இருப்பினும், ஒவ்வொரு சாலையும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இது தலைநகருக்கு ஒரு துரதிா்ஷ்டவசமான மற்றும் வெட்கக்கேடான நிலை என்றாா் செளரவ் பரத்வாஜ்.