பாஜக கூட்டணியிலிருந்து டிடிவி தினகரன் வெளியேற யார் காரணம்? - நயினார் நாகேந்திரன் சொல்வதென்ன?
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து தினகரன் வெளியேற யார் காரணம்? என்பதற்கு பதிலளித்து தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியிருக்கிறார்.
முன்னதாக, மதுரையில் இன்று(செப். 6) செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறியது குறித்த கேள்விக்கு, “நான் கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என பாஜக எப்படி சொல்ல முடியும்? கூட்டணியிலிருந்து வெளியேறியதற்கு பாஜக காரணமல்ல, தொண்டர்களின் முடிவால் வெளியேறினோம். நிதானமாக எடுத்த முடிவுதான் இது” என்று கூறினார்.
இந்த நிலையில், இது குறித்து நயினார் நாகேந்திரன் பேசியதாவது, “ஒருமித்த கருத்துகளைப் பிரதிபலிப்போர் ஒருங்கிணைந்தால், திமுக ஆட்சியதிகாரத்துக்கு மீண்டும் வர முடியாது. எனினும், தினகரன் இந்தக் கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்டார். ஆனால், அதற்கு நான் பொறுப்பாக முடியாது.
இந்தச் சூழலில், அவர்களை அணுகி மீண்டும் ஒற்றுமையுடன் இணைந்து செய்லபடுவது தொடர்பாக அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட நான் தயாராக இருக்கிறேன். திமுக ஆட்சியில் இருக்கக்கூடாது என்று நினைப்பவர்கள், அதேபோல, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மீது பாசம் வைத்திருப்பவர்கள், கட்டாயம் ஒன்றிணைந்து அதன்மூலம் திமுகவை வெளியேற்ற வேண்டும்.
நான் தனிப்பட்ட முறையில், டிடிவி தினகரனுடனும் ஓ. பன்னீர்செல்வத்துடனும் நேரடியாகச் சந்தித்துப் பேசத் தயாராக இருக்கிறேன். என்னைப் பொறுத்தவரையில், அஇஅதிமுகவில் உள்ள ஒவ்வொருத்தரும் ஒன்றிணைய வேண்டும்” என்றார்.