Monica: Pottala Muttaye: ”விஜய் ஆண்டனி சார் என்கரேஜாலதான் வேலையை விட்டேன்" - பா...
பாஜக: "தமிழகம் வர அமித்ஷா விமானம் ஏறினாலே திமுக-விற்கு நடுக்கம் ஏற்படுகிறது" - நயினார் நாகேந்திரன்
மதுரை எப்போதும் திமுகவிற்கு ராசியில்லாதது, எங்களுக்கு ராசியானது, தமிழகத்தில் மீனாட்சியம்மன் ஆட்சியை உருவாக்குவோம் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார்.
மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற 200 கோடி ரூபாய் வரி முறைகேடு விவகாரத்தைக் கண்டித்து, மதுரை மாவட்ட பாஜக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு நயினார் நாகேந்திரன் பேசும்போது, "மதுரையில் ஒரு கூட்டணியை ஆரம்பித்து, மாநாடு போலக் கூட்டத்தையும் நடத்தினாரோ அப்போதிருந்து அமித் ஷா டெல்லியிலிருந்து தமிழகத்திற்கு விமானத்தில் ஏறினாலே திமுகவிற்கு நடுக்கம் ஏற்படுகிறது.

தமிழ்நாட்டில் மிகப்பெரிய ஆட்சி மாற்றத்திற்குக் காரணமாக இருக்கப்போகிற தமிழக மக்களுக்கு நன்றியையும் வணக்கத்தையும் அமித்ஷா முன்கூட்டியே கூறியிருக்கிறார்.
ஓரணியில் தமிழ்நாடு என்கிறார்கள், முதலமைச்சருக்கு வேற வேலையே இல்லை, ஏனென்றால், ஓரணியில் காவல் நிலையங்களில் லாக்கப் டெத், ஓரணியில் கள்ளச்சாராயம் விற்றுக் கொண்டிருக்கிறார்கள். கள்ளச்சாராயம் குடித்துச் செத்தால் 10 லட்சம் ரூபாய், சாதாரணமாக இறந்தால் மூன்று லட்ச ரூபாய்.
தமிழ்நாட்டில் நடக்கிற எந்தத் தவறையும் தேசிய ஜனநாயகக் கூட்டணியைத் தவிர வேறு யாரும் தட்டிக் கேட்பதில்லை. விடுதலைச் சிறுத்தைகள் வேங்கை வயல் குறித்துப் பேசுவதில்லை. கம்யூனிஸ்ட் கட்சி பரவாயில்லை, சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று பேசுவதைப் பாராட்டுகிறேன்.
அதே நேரத்தில் காங்கிரஸ் என்ற கட்சி தமிழ்நாட்டில் இருக்கிறதா இல்லையா என்ற யாருக்குமே தெரியவில்லை. எந்த விஷயம் பற்றியும் அவர்கள் பேசுவதில்லை.
மதுரையிலிருந்து சொல்கிறேன், 2026 தேர்தலில் திமுக கூட்டணி வீட்டிற்கு அனுப்பப்படும் அதற்கான அச்சாரம்தான் இந்த ஆர்ப்பாட்டம். மதுரை எப்போதும் ராசியான நகரம், அமித் ஷாவிற்குக் கூட்டம் அமோகமாக வந்தது. முருக பக்தர்கள் மாநாடு சிறப்பாக நடைபெற்றது.
நாங்கள் நடத்துவது தான் உண்மையான முருக பக்தர்கள் மாநாடு என்று, மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டை அறநிலையத்துறை அமைச்சர் குறை சொன்னார். அதனால் 2026 தேர்தலையும் முருகன் பார்த்துக்கொள்வார். மதுரை எங்களுக்குத்தான் ராசி, திமுகவுக்கு ராசி கிடையாது. 1967-ல் திமுக பொதுக்குழு இங்கு நடந்தது. 22 வருடம் ஆட்சிக்கே வர முடியவில்லை.

மதுரை மாநகராட்சியில் 150 கோடி, 200 கோடி முறைகேடு என்கிறார்கள். கடவுளுக்குத்தான் வெளிச்சம். கமிஷனர் மற்றும் உதவி கமிஷனர் பாஸ்வேர்டை பயன்படுத்தி முறைகேடு செய்திருக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய ஊழல்.
இதனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மண்டலத்தலைவர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் எப்படி நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய முடியும்? துணை மேயர் புறம்போக்கு இடத்தில் வீடு கட்டி உள்ளார் எனச் சொல்கிறார்கள். அந்த நடைபாதை இடத்தை மீட்க முடியவில்லை. இப்படியாக எங்கும் ஊழல், எதிலும் ஊழல்.
சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மாநகராட்சி மண்டலத் தலைவர்களிடம் ராஜினாமா கடிதம் வாங்கியிருக்கிறார், இதையெல்லாம் பார்த்துக்கொண்டு மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள்.
இது கண்ணகிக்கு நீதி கிடைத்த மண், இந்த மண்ணில் நாங்கள் நீதி கேட்கிறோம் ஆட்சி மாற்றம் வேண்டும், ஆட்சி அகற்றப்பட வேண்டும். ஓர் அணி என்ற பொய்யைச் சொல்லிக் கொண்டிருக்கிற திமுக அரசை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்" என்றார்.