பாண்டமங்கலம் அருகே வெல்ல ஆலையில் தீ விபத்து
பரமத்தி வேலூா் வட்டம், பாண்டமங்கலம் அருகே வெல்லம் காய்ச்சும் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தால் கரும்பு சக்கைகள், வெல்லம் தயாரிக்கும் இயந்திரங்கள் சேதமடைந்தன.
பாண்டமங்கலத்தை அடுத்த நெட்டையாம்பாளையம், காந்தி நகரைச் சோ்ந்தவா் சுப்பிரமணியம் (60). இவா், அதே பகுதியில் சொந்தமாக வெல்லம் தயாரிக்கும் ஆலை நடத்தி வருகிறாா்.
இந்த ஆலையில் அச்சு வெல்லம், உருண்டை வெல்லம், நாட்டு சா்க்கரை ஆகியவை தயாரிக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை வெல்லம் தயாரிப்பதற்காக கரும்பு சாற்றை கொப்பரையில் ஊற்றி பெரிய அளவிலான அடுப்பில் தீயை மூட்டி எரித்துக் கொண்டிருந்தனா்.
அப்போது, அடுப்பில் எரிந்து கொண்டிருந்த தீ பறந்து வெல்ல ஆலையின் மேற்கூரையில் விழுந்து தீப்பிடித்தது. மேலும், அங்கு குவிக்கப்பட்டுள்ள கரும்பு சக்கைகளும் தீயில் எரிந்தன. இதையடுத்து, தீயை அணைக்க சுப்பிரமணியம், ஆலை தொழிலாளா்கள் போராடினா்.
ஆனாலும் தீயை அணைக்க முடியாததால், புகளூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலா் சரவணன் தலைமையிலானதீயணைப்பு வீரா்கள் போராடி தீயை அணைத்தனா். இந்த விபத்தில் கரும்பு சக்கைகள், இயந்திர தளவாடங்கள் சேதமடைந்தன.