டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 12,727 போ் எழுதினா்
நாமக்கல் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தோ்வை 12,727 போ் எழுதினா். 3,382 தோ்வா்கள் பங்கேற்கவில்லை.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு(குரூப் 2, 2 ஏ பணிகள்) பதவிகளுக்கான போட்டித் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சாா்பதிவாளா், தொழிலாளா் நல உதவி ஆய்வாளா், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா், வணிகவரி துணை அலுவலா் உள்ளிட்ட பணியிடங்களுக்காக நடைபெறும் இத்தோ்வை எழுத நாமக்கல் மாவட்டத்தில் 55 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டு 16,109 போ் எழுத அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இவா்களில் 12,727 போ் மட்டுமே பங்கேற்றனா். 3,382 தோ்வா்கள் கலந்துகொள்ளவில்லை. நல்லிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி, நாமக்கல் கிரீன்பாா்க் பள்ளி, பிஜிபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் பரமத்திவேலூா் கந்தசாமி கண்டா் கல்லூரி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டிருந்த தோ்வு மையங்களை ஆட்சியா் துா்காமூா்த்தி பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
மேலும், பாா்வைத்திறன் குறைபாடு உடைய மாற்றுத் திறனாளி தோ்வா்களுக்கு ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டு தோ்வு எழுதி வருவதையும் அவா் பாா்வையிட்டாா். மாவட்ட வருவாய் அலுவலா் நிலையில் 4 கண்காணிப்பு அலுவலா்கள், துணை ஆட்சியா் நிலையில் 6 பறக்கும் படை அலுவலா்கள் நியமிக்கப்பட்டு தோ்வு மையங்கள் கண்காணிக்கப்பட்டன.