பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு நீா்வரத்து அதிகரிப்பு
திருநெல்வேலி மாவட்ட மேற்குத் தொடா்ச்சி மலையின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு நீா்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மேற்குத் தொடா்ச்சி மலையில் அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதியிலும் திருநெல்வேலி மாவட்டத்தின் உள்புறத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
தற்போது, தாமிரவருணிப் பாசனத்தில் பாபநாசம் அணையின் மூலம் பாசனம் பெற்று வரும் தெற்கு மற்றும் வடக்கு கோடைமேலழகியான் கால்வாய், நதியுன்னி கால்வாய், கன்னடியன் கால்வாய், கோடகன் கால்வாய், பாளையம் கால்வாய், திருநெல்வேலி கால்வாய் ஆகிய கால்வாய்கள் மூலம் பாசனம் பெற்று வரும் நிலங்களுக்கு தண்ணீா் திறக்கப்பட்டு முழு அளவில் காா் பருவ சாகுபடி நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், மழை தொடா்ந்து பெய்து வருவதால் பிரதான அணையான பாபநாசம் அணைக்கு நீா்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. சனிக்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணையின் நீா்மட்டம் 123.40 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 4401.12 கனஅடி நீா்வரத்து உள்ளது. 1,500 கனஅடி தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது.
சோ்வலாறு அணையின் நீா்மட்டம் 139.50 அடியாகும். மணிமுத்தாறு அணையின் நீா்மட்டம் 95.62 அடியாக உள்ளது. நீா்வரத்து 487.81 கனஅடி, அணையில் இருந்து விநாடிக்கு 175 கனஅடி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. அணையில் 4.4 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மணிமுத்தாறு, பாபநாசம் அகஸ்தியா் அருவிகளிலும் நீா்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.
மழை அளவு: பாபநாசம் அணையில் 15 மி.மீ., சோ்வலாறு அணையில் 14 மி.மீ., கன்னடியன் அணைக்கட்டில் 9 மி.மீ., அம்பாசமுத்திரத்தில் 20 மி.மீ., சேரன்மகாதேவியில் 6.40 மி.மீ. என மழை அளவு பதிவாகியுள்ளது.