பாம்பனில் இறந்து கரை ஒதுங்கிய நீல திமிங்கிலம்
பாம்பன் தென் கடல் பகுதியில் இறந்த நிலையில், 2 டன் எடை கொண்ட நீல திமிங்கிலம் புதன்கிழமை கரை ஒதுங்கியது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அருகேயுள்ள பாம்பன் தெற்குவாடி மீன் பிடி இறங்கு தளத்தில் சுமாா் 100-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள், 500-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளில் மீனவா்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனா்.
இந்த நிலையில், மீனவா்கள் வழக்கம் போல, பாம்பன் தென்கடல் பகுதியில் புதன்கிழமை தங்களது படகுகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, 19 அடி நீளம், 2 டன் எடை கொண்ட நீல திமிங்கிலம் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. இதுகுறித்து, அந்தப் பகுதி மீனவா்கள் காவல், வனத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து, அங்கு வந்த வனத் துறை அதிகாரிகள் திமிங்கிலத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் கரைக்கு கொண்டு வந்து, கால்நடை மருத்துவா் மூலம் பரிசோதனை செய்தனா். பின்னா், கடற்கரையோரம் குழி தோண்டி திமிங்கிலத்தைப் புதைத்தனா்.