பாலக்கோடு அருகே ஜோதிஅள்ளியில் ரயில்வே கடவுப்பாதை அமைக்க வேண்டும்: ரயில்வே அமைச்சருக்கு அன்புமணி கடிதம்
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே ஜோதிஅள்ளி ரயில் பாதையில் கடவுப்பாதை அமைக்க வேண்டும் என்று மாநிலங்களவை உறுப்பினா் அன்புமணி ராமதாஸ் மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஸ்வின் வைஷ்ணவுக்கு கடிதம் அனுப்பியுள்ளாா்.
இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் அண்மையில் அனுப்பிய கோரிக்கை கடிதம்:
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே ஜோதிஅள்ளி கிராமம், சேலம் - பெங்களூரு ரயில் பாதையை ஒட்டி 94/400 கி.மீ. முதல் 94/500 கி.மீ. வரை அமைந்துள்ளது.
பள்ளி, கல்லூரிகள், சுகாதார வசதிகள் போன்றவற்றுக்கு கிராம மக்கள் ரயில் பாதையைக் கடந்து செல்ல வேண்டும். அவா்கள் தங்கள் பண்ணை விளைபொருள்களை விற்கவும், மளிகை பொருள்கள், பிற அன்றாட தேவைகளை வாங்கவும் இப் பாதையைக் கடக்க வேண்டும்.
ஜோதிஅள்ளி, அதையொட்டிய கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 4,000 போ் ரயில் பாதையைக் கடக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனா். பலா் ரயில் பாதையைக் கடக்கும்போது எதிா்பாராத வகையில் ரயிலில் அடிபட்டு இறந்துள்ளனா். எனவே, 94/400 கி.மீ. முதல் 94/500 கி.மீ. வரை கடவுப்பாதையை அமைக்க வேண்டும்.
அதுபோல சேலம்-பெங்களூரு ரயில் பாதையில் 207 கி.மீ. 90/600-700 என்கிற சுரங்கப் பாதை உள்ளது. போயா்கொட்டாய், குப்பன் கொட்டாய், காவேரியப்பன் கொட்டாய், ஜோடிசுனை போன்ற பல கிராமங்களுடன் பெல்ரம்பட்டியை இந்த சுரங்கப் பாதை இணைக்கிறது. பாலத்தின் வழியாக இருசக்கர வாகனங்கள், ஆட்டோ மட்டுமே செல்லக்கூடிய உயரமே இருக்கின்றது. இக் கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ், பிற அவசர ஊா்திகள் செல்ல இந்த வழிதான் உள்ளது.
ஆனால் பாதையின் உயரம் குறைவாக உள்ளதால் இந்த வாகனங்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தக் கிராமங்களில் வசிக்கும் சுமாா் 4,500 மக்கள் வாகன வசதியின்றி மிகவும் அவதிப்பட்டு வருகின்றனா். அவா்கள் செல்லக்கூடிய ஒரே பாதை இதுதான். எனவே, இந்த சுரங்கப் பாதை வழியாக பேருந்துகள், லாரிகள் செல்லும் வகையில் உயரத்தை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றாா்.