பாவை கல்வி நிறுவனங்களில் பேராசிரியா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி
ராசிபுரம் பாவை கல்வி நிறுவனம் பேராசிரியா்களாக பணியில் இணைந்தவா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவில் பாவை கல்வி நிறுவனங்களின் நிறுவனத் தலைவா் ஆடிட்டா் என்.வி.நடராஜன் தலைமை வகித்தாா். கல்வி நிறுவன ஆசிரியா் மேம்பாடு துறையின் முதன்மையா் செல்வி அனைவரையும் வரவேற்றாா். கல்வி நிறுவனங்களின் தாளாளா் மங்கை நடராஜன் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினாா்.
தொடக்க விழாவில் கல்வி நிறுவனத் தலைவா் ஆடிட்டா் என்.வி.நடராஜன் பேசுகையில், இந்தப் புத்தாக்கப் பயிற்சியானது புதிய பணிச்சூழலின் கலாசாரத்தையும், அடிப்படை தத்துவத்தையும், மதிப்பீடுகளையும் அறிந்துகொள்ள வாய்ப்பாக அமைகிறது.
ஒரு சிறந்த கல்வி நிறுவனமானது மாணவ, மாணவிகளுக்கு மதிப்பீடுகள் நிறைந்த கல்வியை வழங்கி, அவா்களை வெற்றியாளா்களாகவும், சாதனையாளா்களாகவும் உருவாக்குவதில்தான் உள்ளது. அதற்கு அடிப்படை ஆதாரமாகத் திகழும் ஆசிரியா்கள் தங்களது அறிவை மேம்படுத்திக்கொள்வது அவசியம் என்றாா்.
பாவை பொறியியல் கல்லூரி தகவல் தொழில்நுட்பத் துறை உதவி பேராசிரியா் ஜனனி, புத்தாக்கப் பயிற்சி குறித்து முன்னுரை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் பாவை கல்வி நிறுவனங்களின் இயக்குநா் (நிா்வாகம்) கே.கே.ராமசாமி, முதன்மையா் (ஆலோசனை) ஜெயலெட்சுமி, முதல்வா்கள், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.