பா்மா, இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியவா்கள் கவனத்துக்கு
பா்மா மற்றும் இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியோா்களுக்கு வழங்கப்பட்ட, வீட்டு கடன்களுக்கு அடமானம் செய்யப்பட்ட ஆவணங்களை, கடன் விவரங்களை நீக்கித் திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பா்மா மற்றும் இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியோா்களுக்கு வழங்கப்பட்ட வீட்டு கடன்களுக்கு அடமானம் செய்யப்பட்ட நில ஆவணங்கள், கடவுச்சீட்டுகள் மற்றும் பிற ஆவணங்கள் அனைத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள கடன் தொடா்பான விவரங்கள் அனைத்தையும் நீக்கவும், அனைத்து ஆவணங்களை திரும்ப ஒப்படைக்கவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட பயனாளிகள் தகுந்த ஆவணங்களுடன் நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது பிரிவு) அல்லது தாங்கள் கடன் பெற்ற நாகப்பட்டினம், வேதாரண்யம் வருவாய் கோட்ட அலுவலா் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.