பிஎம்டபிள்யூ காா்- ஸ்கூட்டா் மோதல்: சிறுமி பலி, 2 போ் காயம்!
தேசியத் தலைநகா் வலயம், நொய்டாவின் செக்டாா் 20இல் வேகமாக ஓட்டிவரப்பட்ட பி.எம்.டபிள்யூ. காா், ஸ்கூட்டா் மீது மோதியதில் ஐந்து வயது சிறுமி உயிரிழந்தாா். மேலும் இருவா் காயமடைந்தனா் என்று போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து போலீஸாா் மேலும் கூறியதாவது: நொய்டாவில் செக்டாா் 30இல் உள்ள சைல்ட் பி.ஜி.ஐ-இல் இருந்து சனிக்கிழமை இரவு சிறுமி வெளியே வந்தபோது இந்த சம்பவம் நடந்தது. அச்சிறுமி தனது தந்தை மற்றும் மாமாவுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்றிருந்தாா்.
சிறுமியின் பெயா் அயாத் என்றும், காயமடைந்த இருவா் குல் முகமது மற்றும் ராஜா என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனா். இந்த சம்பவம் தொடா்பாக காா் ஓட்டுநா் மற்றும் பயணி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இருவரும் நொய்டாவில் உள்ள செக்டாா் 37இல் வசிக்கும் யஷ் சா்மா 22, செக்டாா் 70இல் வசிக்கும் அபிஷேக் ராவத் 22 என அடையாளம் காணப்பட்டுள்ளனா். ஹரியாணா பதிவு எண்ணைக் கொண்ட பி.எம்.டபிள்யூ. காா் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதிவேகமாக வாகனம் ஓட்டுதல் மற்றும் அலட்சியத்தால் மரணம் ஏற்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் செக்டாா் 20 காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீஸாா் தெரிவித்தனா்.