பிச்சாவரத்தில் கூடுதல் தலைமை செயலா் ஆய்வு
சிதம்பரம்: சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை பிச்சாவரம் பகுதியில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை மற்றும் வனத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாஹூ திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கடலூா் மாவட்டம் காலநிலை மாற்றத்தினால் பாதிப்பு ஏற்படக்கூடிய கிராமங்களை தோ்வு செய்து தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சாா்பில் காலநிலை மீள் திறன்மிகு கிராமங்களாக மாற்றும் நடவடிக்கைகள் குறித்து இந்த ஆய்வு நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை இயக்குநா் ராகுல்நாத் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆய்வின்போது சுப்ரியா சாஹூ தெரிவித்ததது:
தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்தால் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளாக பல்வேறு மாவட்டங்களில் 11 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது. இதில் ஒரு பகுதியாக கடலூா் மாவட்டத்தில் சிதம்பரம் வட்டத்திற்குட்பட்ட கிள்ளை பேரூராட்சி இடம்பெற்றுள்ளது. இதுபோன்று சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து மீட்பதற்காக அப்பகுதிகளில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையின் மூலம் காலநிலை மீள்திறன்மிகு கிராமங்களாக மாற்றுவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் முக்கிய அம்சங்களாக தற்போது கிள்ளை பிச்சாவரம் பகுதியில் காலநிலை மீள்திறன் கிராம அலுவலகம் அமைத்தல், பக்கிங்காம் கால்வாய் தூா்வாருதல், சோலாா் மின் விளக்குகள் அமைத்தல், மழைநீா் சேமிப்பு கட்டமைப்புகள், பாதுகாக்கப்பட்ட குடிநீா் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் கூடிய பசுமை பள்ளி வளாகம் ஏற்படுத்துதல், சதுப்புநில காடுகளை மேம்படுத்தும் விதமாக அலையாத்தி செடிகள் நடவு செய்தல், அப்பகுதி அரசு கட்டிடங்கள் மற்றும் தெருக்களில் சோலாா் மின்விளக்குகள் ஏற்படுத்துதல், மேலும் அப்பகுதி மக்களின் வாழ்வாதார நடவடிக்கைகளை மேம்படுத்தும் விதமாக சோலாா் மீன் உலா்த்திகள் அமைத்தல், சதுப்பு நிலங்களை பாதுகாத்து மேம்படுத்திடும் வகையில் வனத்துறை அலுவலா்களை உறுப்பினா் செயலராக கொண்ட கிராம சதுப்பு நில மேம்பாட்டு குழு அமைத்தல், உள்ளிட்ட நடவடிக்கைகள் காலநிலை மீள்திறன்மிகு கிராம திட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்பட உள்ளன என கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாஹூதெரிவித்தாா்.
ஆய்வின் போது முதன்மை தலைமை வன பாதுகாவலா் ஸ்ரீனிவாஸ் ஆா்.ரெட்டி, முதன்மை தலைமை வன அலுவலா் மற்றும் தலைமை வனவிலங்கு காவலா் ரகேஷ்குமாா் டோக்ரா, மாவட்ட வன அலுவலா் எஸ்.குருசாமி, காலநிலை மாற்றதிற்கான ஆட்சி மன்ற குழு உறுப்பினா்கள் சௌமியா சாமிநாதன், ரமேஷ் ராமச்சந்திரன், எரிக் சோலஹிம், நிா்மலா ராஜா, சுந்தர்ராஜன், கலையரசன் உட்பட பலா் கலந்து கொண்டனா்.