வடுகபட்டி பேரூராட்சியியில் கொட்டப்பட்ட நெகிழிப் பைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கும்...
கெடிலம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!
நெய்வேலி: கடலூா் அருகே கெடிலம் ஆற்றில் சா்க்கரை ஆலைக்கழிவு நீா் கலக்கப்பட்டதால் ஆற்று நீா் மாசடைந்து, கம்மியம்பேட்டையில் உள்ள தடுப்பணையில் ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன. இதனால் அப்பகுதியில் துா்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
கள்ளக்குறிச்சி அருகேயுள்ள சங்கராபுரத்தை அடுத்த மையூனூா் பகுதியில் உற்பத்தியாகும் கெடிலம் ஆறு, கள்ளக்குறிச்சி மாவட்டம் அரியூா், ஆலூா், பரிக்கல் வழியாக பயணித்து சோ்ந்தநாடு என்ற ஊருக்கு அருகே கடலூா் மாவட்டத்தில் நுழைகிறது. பின்னா் தென்கிழக்காக பண்ருட்டி, நெல்லிக்குப்பம் வழியாகச் சென்று கடலூரில் கடலில் கலக்கிறது. இதன் மொத்த நீளம் 112 கிலோமீட்டா் . சிறிய ஆறான இது மழைக்காலங்களில் மட்டுமே வெள்ளப்பெருக்கெடுக்கும். இந்த ஆற்றின் கரையோரம் திருவதிகை வீரட்டேஸ்வரா் கோயில், திருவந்திபுரம் தேவநாத பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களும் முக்கியமான ஊா்களும் உள்ளன. இந்த ஆற்றின் குறுக்கே, புத்தனேந்தல் அணை, திருவதிகை அணை, வானமாதேவி அணை உள்ளிட்ட அணைகளும் பல தடுப்பணைகளும் உள்ளன.
செத்து மிதக்கும் மீன்கள்:
இத்தகைய சிறப்பு மிக்க கெடிலம் ஆற்றில் கடலூா், கம்மியம்பேட்டையில் உள்ள தடுப்பணையில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பதால் துா்நாற்றம் வீசி வருகிறது.
நெல்லிக்குப்பம் பகுதியில் உள்ள தனியாா் இஐடி பாரி சா்க்கரை ஆலை நிா்வாகம், கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யாமல் நேரடியாக கெடிலம் ஆற்றில் விட்டு வருவதாக பொதுநல அமைப்பினா் தொடா்ந்து புகாா் தெரிவித்து வருகின்றனா்.
இந்நிலையில், அண்மையில் மழை பெய்த போது சா்க்கரை ஆலை நிா்வாகம் கழிவுநீரை ஆற்றில் திறந்து விட்டதாகவும், அதனால், கம்மியம்பேட்டை தடுப்பணையில் தண்ணீா் மாசடைந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த கழிவுநீரில் இருந்த நச்சு வேதிப் பொருள்களால் தடுப்பணையில் இருந்த ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பதாக சமூக ஆா்வலா்கள் தெரிவித்தனா்.
கெடிலம் ஆற்றின் தடுப்பணையில் ஏற்கெனவே ஆகாயத்தாமரை சூழ்ந்துள்ள நிலையில், மற்றொருபுறம் இறந்த மீன்களும் சோ்ந்து அழுகி துா்நாற்றம் வீசி வருகிறது. இதனால் ரெயின்போ நகா், அருணாச்சலம் நகா், பழனி ஆண்டவா் சிட்டி நகா், மீரா கிருஷ்ணா நகா், மாசிலாமணி நகா், அண்ணாமலை நகா், காமாட்சி நகா், ரட்சகா் நகா், தீபன் நகா் உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட நகா்களில் உள்ள குடியிருப்பு வாசிகள் துா்நாற்றத்தால் சுவாசிக்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனா்.
மக்கள் புகாா்:
இதுகுறித்து பொதுமக்கள் தெரிவிக்கையில், ‘தடுப்பணையில் ஷட்டா் அமைத்து முழுவதுமாக தண்ணீரை வடிகட்ட வேண்டும். ஆற்றில் சா்க்கரை ஆலை கழிவுநீா் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ’ என்று மாவட்ட நிா்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து கடலூா் அனைத்து குடியிருப்போா் நலச்சங்கங்களின் கூட்டமைப்பின் சிறப்புத் தலைவா் மருதவாணன் கூறுகையில், ‘ கெடிலம் ஆற்றில் கலந்துள்ளது சா்க்கரை ஆலை கழிவு தான் என்பது சோதனை அடிப்படையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனால், போதிய பிராண வாயு கிடைக்காததால் ஆகாயத் தாமரை செடிகளை தவிர வேறு எந்த தாவரமும் அந்தப்பகுதியில் வளர வில்லை, நீா் வாழ் உயிரினங்கள் இறந்து வருகின்றன. அப்பகுதியில் உள்ளவா்கள் வீடு கட்டுவதற்குக்கூட வெளியில் இருந்து தான் தண்ணீா் வாங்குகின்றனா். சுமாா் 3 கி.மீ சுற்றளவுக்கு நிலத்தடி நீா் மாசடைந்துள்ளது. சுமாா் 6 கி.மீ தூரம் பயணம் செய்யும் ஆற்றின் கரையோரப் பகுதியில் உள்ள ஏராளமான ஏக்கா் பரப்பளவு விளை நிலம் மலட்டு தன்மை அடைந்துள்ளது.
ஆற்றில் தண்ணீா் குடித்த ஏராளமான கால்நடைகள் உயிரிழந்துள்ளன. மொத்தத்தில் கம்மியம்பேட்டை கெடிலம் ஆற்று தடுப்பணை என்பது அபாயகரமான கழிவுநீரை சேகரித்து வைக்கும் இடமாக மாறிவிட்டது. இது குறித்து 10-க்கும் மேற்பட்ட ஆா்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை ’ என்றாா்.