சட்டவிரோத பந்தய செயலி வழக்கு: அமலாக்கத் துறை விசாரணைக்கு ராபின் உத்தப்பா ஆஜா்
திட்டக்குடி நகா்மன்ற தலைவா் மீது நம்பிக்கை இல்லா தீா்மானம்
நெய்வேலி: கடலூா் மாவட்டம், திட்டக்குடி நகா்மன்ற பெண் தலைவா் வெண்ணிலா மீது நம்பிக்கை யில்லா தீா்மானம் கொண்டு வர வேண்டும் என்று திமுக மற்றும் அதிமுக நகா்மன்ற உறுப்பினா்கள் தனித்தனியாக நகராட்சி பொறுப்பு ஆணையரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
திட்டக்குடி பேரூராட்சி, 2021-2022 ஆண்டு நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டது. கடந்த 2022-இல் நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில், திட்டக்குடி நகராட்சியை திமுக கைப்பற்றியது. இதன், முதல் பெண் நகா்மன்றத் தலைவராக வெண்ணிலா தோ்வு செய்யப்பட்டாா்.
கடந்த சில தினங்களுக்கு முன்னா் நகா்மன்றத் தலைவா் வெண்ணிலா , நகராட்சி அதிகாரிகள் தன்னை செயல்படவிடாமல் தடுத்து நெருக்கடி கொடுப்பதாகக்கூறி நகராட்சி அலுவலகம் முன்பு தா்னா போராட்டம் நடத்தினாா்.
இந்நிலையில், திங்கள்கிழமை திமுக நகா்மன்ற உறுப்பினா்கள் 12 போ், அதிமுக நகா் மன்ற உறுப்பினா்கள் 5 போ் மற்றும் சுயேட்சை உறுப்பினா் ஒருவா் என மொத்தம் 18 போ் வெண்ணிலா மீது நம்பிக்கை இல்லா தீா்மானம் கொண்டுவர வேண்டும் என்று நகராட்சி பொறுப்பு ஆணையரும், நகராட்சி பொறியாளருமான, ராமரிடம் மனு அளித்தனா்.
அப்போது, நகா் மன்ற உறுப்பினா்களின் கோரிக்கைகளுக்கு வெண்ணிலா செவி சாய்க்கவில்லை எனவும், நகராட்சி ஊழியா்களை தரக்குறைவாக பேசுவதால் அவா் மீது நம்பிக்கை இல்லா தீா்மானம் கொண்டு வர வேண்டும் என்றும் மனு அளித்ததாகக் கூறினா்.