விடுதி வளாகத்தில் மருத்துவ மாணவி வன்கொடுமை! இது மத்தியப் பிரதேசத்தில்...
பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்ற கொனேரு ஹம்பி!
இந்திய கிராண்ட் மாஸ்டரான கொனேரு ஹம்பி பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
இந்திய கிராண்ட் மாஸ்டரான கொனேரு ஹம்பி ஃபிடே உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் பெண்கள் பிரிவில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார்.
இதனைப் பாராட்டும் விதமாக பிரதமர் மோடி கொனேரு ஹம்பியை தனது இல்லத்துக்கு வரவழைத்து வாழ்த்துத் தெரிவித்தார். மேலும், ஹம்பி பிரதமரைச் சந்தித்தது எனது வாழ்நாளில் கிடைத்த பாக்கியம் என்று விவரித்தார்.
இதுபற்றி கொனேரு ஹம்பி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “நமது மதிப்பிற்குரிய பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பது ஒரு நம்பமுடியாத மரியாதை மற்றும் என் வாழ்நாளில் கிடைத்த பாக்கியம். உத்வேகம், ஊக்கம் நிறைந்த இந்த அனுபவம் உண்மையிலேயே மறக்க முடியாதது. இந்த அற்புதமான தருணத்திற்கு நன்றி!” எனப் பதிவிட்டுள்ளார்.
கொனேரு ஹம்பியின் பதிவை மறுப்பதிவிட்டு கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, “கோனேரு ஹம்பியையும் அவரது குடும்பத்தினரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி. அவர் ஒரு விளையாட்டு சின்னமாகவும், ஆர்வமுள்ள வீரர்களுக்கு உத்வேகத்தின் உதாரணமாகவும் இருக்கிறார்.
அவருடைய கூர்மையான அறிவும், அசைக்க முடியாத உறுதியும் தெளிவாகத் தெரிகிறது. அவர் இந்தியாவிற்கு மகத்தான பெருமையை கொண்டு வந்துள்ளார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக, 37 வயதான கொனேரு ஹம்பி 2019 ஆம் ஆண்டு ஜார்ஜியாவில் நடைபெற்ற போட்டியில் உலக அதிவேக சதுரங்க சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.