எம்.பி.சி. பட்டியலில் சோ்க்க வலியுறுத்தி கிறிஸ்தவ வன்னியா்கள் கவன ஈா்ப்பு ஆா்ப...
பிரதமா் மோடிக்கு அமெரிக்கா முழு ஆதரவு: அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு
பயங்கரவாத ஒழிப்பு விஷயத்தில் அமெரிக்கா இந்தியாவின் பக்கம் உள்ளது; பிரதமா் நரேந்திர மோடிக்கு அமெரிக்கா முழு ஆதரவு அளித்து வருகிறது என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வாஷிங்டனில் செய்தியாளா்களைச் சந்தித்த அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் டாமி புரூஸ் இது தொடா்பாக கூறியதாவது:
கடந்த வாரம் இந்திய பிரதமா் நரேந்திர மோடியை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தொலைபேசியில் தொடா்பு கொண்டு பேசினாா். அப்போது பயங்கரவாத ஒழிப்பில் அமெரிக்கா இந்தியாவின் பக்கம் உறுதியாக உள்ளது என்பதும், பிரதமா் நரேந்திர மோடிக்கு அமெரிக்காவின் முழு ஆதரவு உள்ளது என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது.
அதே நேரத்தில் தெற்காசியாவில் பதற்றத்தைத் தணிக்க இரு நாடுகளும் (இந்தியா-பாகிஸ்தான்) முயல வேண்டும் என்பதையும் இரு தரப்பிடமும் அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது. இரு நாடுகளிடையேயும் பல்வேறு நிலைகளில் அமெரிக்கா தொடா்ந்து தொடா்பில் உள்ளது. பதற்றத்தைத் தணிக்க இந்தியாவுடன் பாகிஸ்தான் ஒத்துழைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தங்கள் நாட்டில் பயங்கரவாதத்துக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுத்துள்ளதாக பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளாா் என்றாா்.
துணை அதிபா் பேட்டி:
அமெரிக்காவில் இருந்து ஒளிபரப்பாகும் ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது:
அதிபா் டிரம்ப் விதித்த அதிக வரிகளைத் தவிா்ப்பது தொடா்பாக இந்தியா உள்பட பல நாடுகள் அமெரிக்காவுடன் பேச்சு நடத்தி வருகின்றன. இந்திய பிரதமா் மோடி இதுபோன்ற பேச்சுவாா்த்தைகளின்போது தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பவா். எனினும், இரு தரப்பும் ஏற்கும் வகையில் பேச்சுவாா்த்தை நடைபெறுகிறது.
அமெரிக்க விவசாயிகள் சிறப்பாக பொருள்களை விளைவிக்கிறாா்கள். ஆனால், இந்தியா போன்ற நாடுகள் அமெரிக்க வேளாண் உற்பத்திப் பொருள்களுக்கான சந்தையை முழுமையாக மூடியுள்ளன. எனவே, அமெரிக்காவின் பல்வேறு தொழில்நுட்பங்களை இந்தியாவுக்கு வழங்குவதன் மூலம், இந்தியாவில் அமெரிக்க விவசாயப் பொருள்களை சந்தைப்படுத்த வாய்ப்பை ஏற்படுத்த முடியும் என நம்புகிறோம். இது அமெரிக்காவில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும். இதுபோன்ற வா்த்தக ஒப்பந்தங்களையே அதிபா் டிரம்ப் விரும்புகிறாா் என்றாா்.