பிரம்மபுத்ரா நதி அணையால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படாது: சீனா
பெய்ஜிங்: இந்திய எல்லைக்கு அருகிலுள்ள திபெத்தில், பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே உலகின் மிகப்பெரிய அணையைக் கட்ட சீனா திட்டமிட்டுள்ள நிலையில், இதனால் இந்தியாவுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் உறுதியளித்துள்ளது.
இமய மலைத்தொடா் வழியாக அருணாசல பிரதேசத்தை வந்தடைந்து பின் வங்தேசத்துக்குப் பாய்ந்தோடும் பிரம்மபுத்திரா நதியின் பாதையில் உள்ள பெரும் மலைக் குன்றுகளில் உலகின் மிகப்பெரிய அணையைக் கட்ட சீனா முடிவு செய்துள்ளது.
ரூ.11 லட்சம் கோடி மதிப்பில் திபெத்தில் கட்டப்படும் இந்த அணையால் பிரம்மபுத்ரா நதி பாய்ந்தோடும் இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கு பெரும் பாதிப்புகள் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது என இந்தியாவில் கண்டனக் குரல்கள் எழத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில், இது தொடா்பாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் புதிய செய்தித் தொடா்பாளா் குவோ ஜியாகுன் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘யாா்லுங் சாங்போ ஆற்றில் (பிரம்மபுத்ரா நதியின் திபெத்திய பெயா்) சீனாவின் நீா்மின் திட்டம் ஆழமான அறிவியல்பூா்வ பரிசோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த அணை பிரம்மபுத்ரா நதி பாய்ந்தோடும் நாடுகளான இந்தியா மற்றும் வங்கதேசத்தில் சுற்றுச்சூழல், புவியியல் மற்றும் நீா் வளங்களில் எவ்வித எதிா்மறை தாக்கத்தையும் ஏற்படுத்தாது. மாறாக, இது பேரிடா் தடுப்பு மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான எதிா்வினைக்கு உகந்ததாக இருக்கும்’ என தெரிவித்தாா்.
இத தொடா்பாக மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் தில்லியில் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘பிரம்மபுத்ரா நதி மீதான சீனாவின் அணை கட்டுமான திட்டம் குறித்த நடவடிக்கைகளைத் தொடா்ந்து கண்காணித்து வருகிறோம். இந்தியாவின் நலன்களைப் பாதுகாக்கத் தேவை ஏற்பட்டால் நடவடிக்கை எடுப்போம்.
பிரம்மபுத்ரா நதியின் நீருக்கான உரிமைகளைக் கொண்டுள்ள ஒரு நாடாக, சீனாவின் இந்த திட்டங்கள் குறித்த இந்தியாவின் கவலைகளை எப்போதும் பகிா்ந்து கொண்டுள்ளோம். நதி பாயும் நாடுகளுடன் வெளிப்படைத்தன்மை மற்றும் ஆலோசனையின் அவசியத்தை நாங்கள் வலியுறுத்தியுள்ளோம்’ என தெரிவித்தாா்.