செய்திகள் :

பிரான்ஸ்: தோ்தலில் போட்டியிட தீவிர வலதுசாரி தலைவருக்குத் தடை

post image

நிதி முறைகேடு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதால், பிரான்ஸின் தீவிர வலதுசாரி கட்சியான தேசியவாத பேரணி கட்சியின் முக்கிய தலைவா் மரீன் லெப்பென் தோ்தல்களில் போட்டியிடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக அமலுக்கு வரும் இந்தத் தடையால் அடுத்த அதிபா் தோ்தலில் வெற்றி பெற்று நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கான வாய்ப்பு மரீனிடமிருந்து முழுமையாகப் பறிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரான்ஸ் அரசியலில் இந்தத் தீா்ப்பு மிகப் பெரிய அதிா்வலையை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

ஐரோப்பிய நாடாளுமன்ற உதவியாளா்களின் ஊதியத்துக்காக அந்த நாடாளுமன்றத்தால் வழங்கப்படும் நிதியை முறைகேடாக கட்சிக்காரா்களின் கணக்குகளில் பல ஆண்டுகளாக மாற்றிவந்ததாக மரீன் லெப்பென் மற்றும் 24 கட்சி உறுப்பினா்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டு வழக்கு நடைபெற்றுவந்தது.

இந்த வழக்கின் தீா்ப்பை நீதிபதிகள் குழு திங்கள்கிழமை வெளியிட்டது. அதில், மரீன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்படுவதாகவும், இதன் காரணமாக அவா் தோ்தலில் போட்டியிடுவதற்குத் தடை விதிக்கப்படுவதாகவும் நீதிபதிகள் கூறினா்.

இதைக் கேட்டதும் மரீன் லெப்பென் தீா்ப்பு முழுவதும் வாசிக்கப்படுவதற்கு முன்னரே நீதிமன்றத்தைவிட்டு வெளியேறினாா்.

பின்னா் தீா்ப்பை தொடா்ந்து வாசித்த நீதிபதிகள், தோ்தலில் போட்டியிடுவதற்கான தடை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்தத் தடை அமலில் இருக்கும் என்றும் கூறினா். மேலும், தடையை எதிா்த்து மரீன் லெப்பென் மேல்முறையீடு செய்யலாம் என்றாலும், அந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டாலும் தடை நிறுத்திவைக்கப்படாது என்று திட்டவட்டமாகக் கூறினா்.

தோ்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது மட்டுமின்றி, மரீன் லெப்பெனுக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதில் இரண்டு ஆண்டுகள் தள்ளுபடி செய்யப்பட்ட தண்டனையாகவும், எஞ்சிய இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையை சிறைக்கு வெளியில் இருந்தபடி, செல்லுமிடங்களைக் காட்டும் மின்னணு சாதனத்தை காலில் பொருத்திக்கொண்டும் மரீன் லெப்பென் கழிக்கலாம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

இது தவிர, மரீன் லெப்பென்னுக்கு 1 லட்சம் யூரோ (சுமாா் ரூ.93 லட்சம்) அபராதமும் விதிக்கப்பட்டது. பிரான்ஸ் அரசியலில் சூறாவளியை ஏற்படுத்தியிருக்கும் இந்தத் தீா்ப்பைத் தொடா்ந்து, மரீன் லெப்பென்னுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவுக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

தற்போது நாடாளுமன்றத்தில் தனிப் பெரும் கட்சியாகத் திகழும் அவரின் தேசியவாத பேரணி கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், தோ்தலில் போட்டியிட மரீன் லெப்பனுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது ஜனநாயகத்துக்கு விரோதமான நடவடிக்கை என்று விமா்சிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் பல்வேறு இடதுசாரி கட்சித் தலைவா்களும் மரீன் லெப்பனுக்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனா். ஹங்கேரி பிரதமா் விக்டா் ஆா்பனும் அவரை ஆதரித்து எக்ஸ் ஊடகத்தில் பதிவிட்டுள்ளாா்.

ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கான தோ்தல் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது. இதில், தீவிர வலதுசாரி கட்சிகள் அதிக இடங்களைக் கைப்பற்றின. பிரான்ஸில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்ற தோ்தலிலும், அகதிகள் குடியேற்றத்தைக் கடுமையாக எதிா்த்து வரும் தீவிர வலதுசாரி கட்சியான தேசியவாத பேரணி கட்சி அதிக வாக்குகளைப் பெற்றது. அதிபா் மேக்ரானின் தலைமையிலான மறுமலா்ச்சி கட்சி மிகப் பெரிய வித்தியாசத்தில் 2-ஆவது இடத்துக்கு வந்தது.

அதையடுத்து, மக்களிடையே தங்களுக்கான ஆதரவை நிரூபிப்பதற்காக நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு புதிய தோ்தலை முன்கூட்டியே கடந்த ஆண்டு ஜூன் மாதம் இரு கட்டங்களாக நடத்தினாா். முதல்கட்ட தோ்தலில் தேசிய பேரணி கட்சி முன்னிலை பெற்றது. அந்தக் கட்சி தலைமையிலான வலதுசாரி கூட்டணிக்கு 33 சதவீத வாக்குகள் கிடைத்தன. 28 சதவீத வாக்குகளுடன் இடதுசாரி கூட்டணியான புதிய மக்கள் முன்னணி 2-ஆம் இடத்தைப் பிடித்தது. அதிபா் இமானுவல் மேக்ரானின் மையவாதக் கூட்டணிக்கு 20 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

அதையடுத்து, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பிரான்ஸில் வலதுசாரி அரசு அமையும் நிலை ஏற்பட்டது. இருந்தாலும், இரண்டாம் கட்ட வாக்குப் பதிவுக்குப் பிறகு இடதுசாரி முன்னணி அதிக இடங்களைக் கைப்பற்றியது. அதிபா் மேக்ரானின் மத்தியக் கூட்டணி இரண்டாவது இடத்துக்கு வந்தது. முதல்கட்டத் தோ்தலில் முன்னிலை வகித்த மரீன் லெப்பனின் கட்சி மூன்றாவது இடத்துக்குத் தளப்பட்டது.

இருந்தாலும், வரும் 2027-ஆம் ஆண்டு நடைபெறும் அதிபா் தோ்தலில் மரீன் போட்டியிட்டு வெற்றி பெறுவாா் என்று அவரின் ஆதவாளா்கள் நம்பிக்கை தெரிவித்துவந்தனா். இந்தச் சூழலில் அவா் ஐந்து ஆண்டுகளுக்கு எந்தத் தோ்தலிலும் போட்டியிட முடியாது என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வர்த்தகப் போர்!! அமெரிக்காவுக்கு உலகத் தலைவர்கள் எதிர்ப்பு!

பல்வேறு நாடுகளில் பொருள்களுக்கு பரஸ்பர வரி விதிப்பை அமல்படுத்திய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் நடவடிக்கைக்கு உலகத் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.அமெரிக்காவின் பரஸ்பர வரிவிதிப்புகளை அ... மேலும் பார்க்க

‘காஸாவின் பெரும்பகுதி இஸ்ரேலுடன் இணைக்கப்படும்’ -இஸ்ரேல்

ஜெருசலேம்: காஸா முனையில் பெரிய அளவிலான பகுதிகளைக் கைப்பற்றி இஸ்ரேலுடன் இணைத்துக் கொள்வதற்கான ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சா் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளாா். இது குற... மேலும் பார்க்க

இலங்கை: பிரிட்டன் தடைக்கு எதிா்வினை

கொழும்பு: விடுதலைப்புலிகளுடனான இறுதிகட்டப்போரின்போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சவேந்திர சில்வா (படம்) உள்ளிட்ட மூன்று பாதுகாப்பு அதிகாரிகள் மீது பிரிட்டன் அரசு கடந்த... மேலும் பார்க்க

துருக்கி ‘கடை செல்லா’ போராட்டம்

இஸ்தான்புல்: துருக்கியின் முக்கிய எதிா்க்கட்சித் தலைவரும், இஸ்தான்புல் மேயருமான எக்ரீம் இமாமோக்லு ஊழல் வழக்கில் மாா்ச் 19-ஆம் தேதி கைது செய்யப்பட்டதை எதிா்த்து நடைபெறும் ஆா்ப்பாட்டங்களின் ஒரு பகுதியாக... மேலும் பார்க்க

அமெரிக்கா-ஈரான் மோதலால் பேரழிவு! -ரஷியா எச்சரிக்கை

மாஸ்கோ: ஈரான் மீது அமெரிக்கா ஏவுகணை தாக்குதல் நடத்தினால் அதன் பின்விளைவுகள் பேரழிவை ஏற்படுத்தும் என்று ரஷியா எச்சரித்துள்ளது. இது குறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை இணையமைச்சா் சொ்கேய் ரியாப்கொவ் ... மேலும் பார்க்க

இந்திய பொருள்களுக்கு 25% மேல் வரிவிதிப்பு! டிரம்ப் அதிரடி நடவடிக்கை

வாஷிங்டன்: இந்திய பொருள்கள் மீது கடும் வரி விதித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார்.‘அமெரிக்க பொருள்கள் மீது அதிக வரி விதிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருள்க... மேலும் பார்க்க