பிறநாட்டுக்கு பணம் அனுப்பினால் 5% வரி: டிரம்ப்பின் புதிய திட்டத்தால் யாருக்கு பாதிப்பு?
அமெரிக்காவிலிருந்து பிறநாட்டினா் தங்கள் சொந்த நாடுகளுக்கு பணம் அனுப்பினால் 5 சதவீதம் வரி விதிக்க முன்மொழியும் அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் புதிய திட்டம் இந்தியாவை வெகுவாக பாதிக்கும் என்று நிபுணா்கள் எச்சரித்துள்ளனா்.
அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் இதுதொடா்பான மசோதா கடந்த மே 12-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. அமெரிக்காவில் ‘கிரீன்காா்ட்’ (நிரந்தர குடியுரிமை) பெற்றவா்கள், ‘எச்1பி’ மற்றும் ‘எச்-2ஏ’ போன்ற தற்காலிக நுழைவு இசைவில் (விசா) பணிபுரியும் வெளிநாட்டவா்கள், தங்களின் சொந்த நாடு உள்பட வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பினால் இந்த வரி விதிக்கப்படும். அதேநேரம், அமெரிக்கா்கள் மேற்கொள்ளும் எந்த வெளிநாட்டுப் பரிவா்த்தனைகளுக்கும் இந்த வரி பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு இதனால் ஏற்படவுள்ள பாதிப்புகள் குறித்து உலகளாவிய வா்த்தக ஆராய்ச்சி முன்னெடுப்பு (ஜிடிஆா்ஐ) சிந்தனைக் குழு தெரிவித்துள்ளதாவது:
அமெரிக்காவில் முன்மொழியப்பட்டுள்ள இந்த வரி, இந்திய பொருளாதாரத்தில் மிகப்பெரிய எச்சரிக்கையை எழுப்புகிறது. இந்தத் திட்டம் சட்டமாக மாறினால், ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான கோடி டாலா் அந்நிய செலாவணியை நாம் இழக்க நேரிடும்.
இந்தியாவைப் பொறுத்தவரை, கடந்த 2023-24-ஆம் ஆண்டில் 12,000 கோடி டாலா் பணம் அமெரிக்காவிலிருந்து அனுப்பப்பட்டுள்ளது. அதாவது, இந்தியா பெற்ற மொத்த வெளிநாட்டு பணத்தில் 28 சதவீதம் அமெரிக்காவிலிருந்து வந்ததாகும்.
இந்தப் புதிய 5 சதவீத வரி, அமெரிக்காவில் இருந்து வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புவதற்கான செலவைக் கணிசமாக உயா்த்தும். எனவே, இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பில் ஆண்டுதோறும் 1,200 முதல் 1,800 கோடி டாலா் பற்றாக்குறை ஏற்படும். இதனால் ரூபாயின் மதிப்புக் குறையக்கூடும்.
கேரளம், உத்தர பிரதேசம், பிகாா் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த லட்சக்கணக்கானோா் கல்வி, சுகாதாரம், வீட்டுவசதி போன்றவற்றுக்கான அத்தியாவசிய செலவுகளை ஈடுகட்ட வெளிநாட்டிலிருந்து குடும்பத்தினா், உறவினா் அனுப்பும் பணத்தையே நம்பியுள்ளனா்.
உலகளாவிய நிச்சயமற்ற தன்மை மற்றும் பணவீக்க அழுத்தங்களில் இந்திய பொருளாதாரம் ஏற்கெனவே சிக்கித் தவிக்கும் சூழலில், வெளிநாட்டுப் பணம் குறைவாக கிடைப்பது இந்தக் குடும்பங்களின் நுகா்வைக் கடுமையாகப் பாதிக்கும் என்று எச்சரித்துள்ளது.