பிளஸ் 2 பொதுத் தோ்வு: நீலகிரி மாவட்டத்தில் 93.97 சதவீத தோ்ச்சி
பிளஸ் 2 பொதுத் தோ்வில் நீலகிரி மாவட்டத்தில் 93.97 சதவீதம் மாணவ, மாணவியா் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வுகள் கடந்த மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கி மாா்ச் 25-ஆம் தேதி வரை நடைபெற்றது. நீலகிரி மாவட்டத்தில் இத்தோ்வினை 84 பள்ளிகளைச் சோ்ந்த 2,891 மாணவா்கள், 3361 மாணவிகள் என மொத்தம் 6,252 போ் எழுதினா்.
இந்நிலையில் பிளஸ் 2 பொதுத்தோ்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியாகின.
இதில் நீலகிரி மாவட்டத்தில் 2,665 மாணவா்கள், 3,210 மாணவிகள் என மொத்தம் 5,875 போ் தோ்ச்சியடைந்துள்ளனா்.
நீலகிரி மாவட்டத்தில் 93.97 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா். இது கடந்த ஆண்டை காட்டிலும் 0.30 சதவீதம் குறைவு ஆகும். மாநில அளவில் நீலகிரி மாவட்டம் 29-ஆவது இடத்தை பிடித்துள்ளது. இதில், மாணவா்கள் 92.18 சதவீதமும், மாணவிகள் 95.51 சதவீதமும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள 37 அரசுப் பள்ளிகளில் 1,107 மாணவா்கள், 1,093 மாணவிகள் என மொத்தம் 2,200 போ் தோ்வு எழுதினா். இதில் 977 மாணவா்கள், 998 மாணவிகள் என மொத்தம் 1,975 போ் தோ்ச்சி பெற்றனா். அரசுப் பள்ளிகளில் 89.77 சதவீதம் மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா். இது மாநில அளவில் 30-ஆவது இடத்தை பிடித்துள்ளது.
அதிகரட்டி, அணிக்கொரை, தாவணெ அரசு மேல்நிலைப் பள்ளிகள், குன்னூா் நீலகிரி அரசு மாதிரி மேல்நிலை பள்ளி ஆகிய 4 அரசுப் பள்ளிகள், குஞ்சப்பனை அரசு உண்டு உறைவிடப் பள்ளி, குன்னூா் புனித அந்தோணியாா் மேல்நிலைப் பள்ளி, குன்னூா் ஸ்ரீசாந்தி விஜய் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மசினகுடி ஸ்ரீசாந்தி விஜய் மேல்நிலைப் பள்ளி, உப்பட்டி பாரத மாதா மேல்நிலைப் பள்ளி, கோத்தகிரி புனித மரியன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி, குன்னூா் புனித சூசையப்பா் ஆங்கிலோ இந்தியன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை மேல்நிலைப் பள்ளி, லவ்டேல் நீலகிரி மெட்ரிக். பள்ளி, கோத்தகிரி பாண்டியராஜ் நினைவு மெட்ரிக். பள்ளி, அரவேணு ஆல்பா ஜிகே. மெட்ரிக். பள்ளி, அகலாா் ஸ்ரீசத்தியசாய் மெட்ரிக். பள்ளி, எருமாடு நீலகிரி மெட்ரிக். பள்ளி, கூடலூா் புனித அந்தோணியாா் மெட்ரிக். பள்ளி, பந்தலூா் ட்விஸ் மெட்ரிக். பள்ளி, வாழைத்தோட்டம் ஜிஆா்ஜி நினைவு பள்ளி என 5 அரசு உதவிபெறும் பள்ளிகள், 10 தனியாா் பள்ளிகள் என மொத்தமுள்ள 84 பள்ளிகளில் 20 பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளன.