பாஜக கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.வுக்கு தெலங்கானா ஆளுநர் மகன் கொலை மிரட்டல்: திரிப...
பீகார் டு கோவை... வழிப்பறி கும்பலிடம் துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல்!
கோவை மாவட்டம், சூலூர் அருகே சுகந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மேரி ஜூலியானா (47). இவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். கடந்த சில நாள்களுக்கு முன்பு 2 பேர் இருசக்கர வாகனத்தில் சிகரெட் வாங்குவது போல சென்று, ஜூலியானாவை சுத்தியால் தாக்கி, அவரிடமிருந்து 4 சவரன் தங்க நகைகளைப் பறித்து சென்றனர்.

இதில் படுகாயமடைந்த மேரி ஜூலியானாவை அக்கம், பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து சூலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில், கரூர் மாவட்டம் மணல்மேடு பகுதியைச் சேர்ந்த குணசேகரன் மற்றும் பீகாரை சேர்ந்த விஜயகுமார் ஷாணி, விக்ரம் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.



அவர்களிடமிருந்து ஒரு துப்பாக்கி மற்றும் 18 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், “விஜயகுமார் ரூ.20,000க்கு விக்ரம் குமாரிடம் கள்ளத்துப்பாக்கி வாங்கியுள்ளார். குறைந்த விலைக்கு துப்பாக்கி கொடுப்பதால் அவரிடம் வாங்கியுள்ளனர். விக்ரம் குமார் மேலும் யாருக்காவது துப்பாக்கி வாங்கி கொடுத்துள்ளாரா என்று விசாரணை நடத்தி வருகிறோம்.

குணசேகரன் கடந்த சில ஆண்டுகளாக ஆந்திராவில் வசித்து வருகிறார். இவர்கள் எப்படி இணைந்தனர், என்ன செய்து கொண்டிருந்தனர் என்று விசாரித்து வருகிறோம்.” என்றனர்.