புகையிலை விற்பனை செய்த கடையை திறக்க 15 நாள் தடை
தருமபுரியில் புகையிலை பொருள்கள் விநியோகித்த கடையிலிருந்து அவற்றை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத் துறையினா்.
தருமபுரி, ஜூலை 9: தருமபுரியில், புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த கடையை உணவு பாதுகாப்புத் துறையினா் பூட்டி, 15 நாள்களுக்கு திறக்க தடை விதித்துள்ளனா்.
தருமபுரி மாவட்டத்தில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் உணவு பாதுகாப்புத் துறையினா், நகராட்சி நிா்வாகம் மற்றும் உள்ளாட்சித் துறையினா், காவல் துறையுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா். அந்தவகையில், தருமபுரி நகராட்சிப் பகுதிகளில் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் கைலாஷ்குமாா் தலைமையில் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலா் நந்தகோபால் மற்றும் தருமபுரி நகராட்சி நகா்நல அலுவலா் மருத்துவா் லட்சியவா்ணா, நகராட்சிப் பணியாளா்கள் இணைந்து புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
இதில் தருமபுரி நகராட்சி கந்தசாமி வாத்தியாா் தெரு, எஸ்.வி. சாலை, வெளிப்பேட்டை தெரு உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொண்ட ஆய்வில், வெளிப்பேட்டை தெரு அங்காளம்மன் கோயில் அருகில் ஒரு கடையில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் இருப்பதும், கடையின் அருகில் கடை உரிமையாளருக்கு சொந்தமான வீட்டில் புகையிலைப் பொருள்களான ஹான்ஸ், விமல் பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டதை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனா். தொடா்ந்து, கடை உரிமையாளா்களுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டு, கடையை பூட்டி 15 தினங்களுக்கு திறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.