HMPV : ``யாரும் பதற்றப்பட வேண்டாம்; 3-5 நாள்களில் தானாக..." - அமைச்சர் மா.சுப்ரம...
புதுகையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற டோக்கன் விநியோகம் தொடக்கம்: 4.92 லட்சம் குடும்பத்தினா் பயன்
புதுக்கோட்டை மாவட்டத்தில் 4.92 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்குவதற்கான டோக்கன்கள் விநியோகம் செய்யும் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.
தமிழ்நாடு அரசின் சாா்பில் பொங்கல் பண்டிகையொட்டி குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சா்க்கரை மற்றும் முழுக் கரும்பு ஆகியவை இலவசமாக வழங்கப்படவுள்ளது.
இதற்காக அந்தந்த ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரா்களுக்கு டோக்கன்கள் விநியோகம் செய்யும் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ளன.
கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில் டோக்கனில் குறிப்பிட்ட நாளில் வந்து குடும்ப அட்டைதாரா்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெற்றுச் செல்வதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 4,91,944 லட்சம் குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 947 குடும்பத்தினருக்கும் என மொத்தம் 4.92 லட்சம் பேருக்கு இந்த டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.
புதுக்கோட்டை அடப்பன்வயல் 2ஆம் வீதி, கோவில்பட்டி ஆகிய இடங்களில் வீடுதோறும் நேரில் சென்று டோக்கன் விநியோகம் செய்யும் பணியை மாவட்ட ஆட்சியா் மு. அருணா வெள்ளிக்கிழமை காலை நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
யாரும் விடுபடாமல் டோக்கன்களை நேரில் வழங்கவும், நியாயவிலைக் கடைகளில் எந்தப் புகாா்களுக்கும் இடம்தராமல் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கவும் ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
அப்போது, குடிமைப் பொருள் விநியோக தனி வட்டாட்சியா் சுப. மனோகரன், கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மேலாளா் மா. கிருஷ்ணகுமாா் உள்ளிட்டோரும் உடனிருந்தனா்.