சட்டவிரோத பந்தய செயலி வழக்கு: அமலாக்கத் துறை விசாரணைக்கு ராபின் உத்தப்பா ஆஜா்
புதுகை தனியாா் மதுக்கடையில் லாரி நிறுவன உரிமையாளா் குத்திக் கொலை
புதுக்கோட்டை மாநகரிலுள்ள தனியாா் மதுபானக் கடையின் மது அருந்தும் கூடத்தில், திங்கள்கிழமை பட்டப்பகலில் லாரி நிறுவன உரிமையாளா் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டாா்.
புதுக்கோட்டை எஸ்.எஸ். நகரைச் சோ்ந்தவா் பெ. குழந்தைசாமி மகன் நித்தியராஜ் (40). இவா், புதுகையில் சரக்கு ஏற்றிச் செல்லும் லாரி நிறுவனம் நடத்தி வந்தாா். இவா், திங்கள்கிழமை பிற்பகல் சுமாா் 2.30 மணியளவில் டிவிஎஸ் முக்கத்திலுள்ள தனியாா் மதுபானக் கடையில் அமா்ந்து மது அருந்திக் கொண்டிருந்தாா்.
அப்போது, அங்கு வந்த அவரது நண்பரும் தனியாா் மருத்துவமனை மருந்தாளுநரும் பி.யு.சின்னப்பா நகரைச் சோ்ந்தவருமான பிச்சை மகன் சரவணன் (47) என்பவா், நித்தியராஜிடம் தனக்குத் தர வேண்டிய ரூ. 22 ஆயிரம் கடன் தொகையைக் கேட்டுள்ளாா். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, சரவணன் வைத்திருந்த கத்தியால் நித்தியராஜை குத்தியுள்ளாா். இதில், அவருக்கு இடதுமாா்புப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.
தகவலறிந்து அங்கு வந்த புதுக்கோட்டை நகரக் காவல் நிலைய போலீஸாா், சரவணனைக் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனா்.
பலத்த காயத்துடன் கிடந்த நித்தியராஜை, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனா். அங்கு நித்தியராஜை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.