புதுச்சேரியில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு வெள்ளிக்கிழமை இரவு ஏற்றப்பட்டது.
புதுச்சேரியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஃபென்ஜால் புயல் மற்றும் மழையால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக புதுவை அரசு நிவாரணம் அறிவித்து வழங்கிவருகிறது. இதனிடையே, கடந்த சில நாள்களுக்கு முன்பு வங்கக் கடலில் மீண்டும் காற்றழுத்தத் தாழ்வு நிலை காணப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான முன்னெச்செரிக்கை நடவடிக்கையில் அரசு ஈடுபட்டது. ஆனால், பலத்த மழை ஏதும் பெய்யவில்லை.
இந்த நிலையில், புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு வெள்ளிக்கிழமை இரவு ஏற்றப்பட்டது. மேலும், எச்சரிக்கை வாசகங்கள் அடங்கிய தகவல் பலகையும் வைக்கப்பட்டது. துறைமுகத்திலிருந்து வெகு தொலைவில் புயல் அறிகுறி தோன்றியுள்ளதை குறிக்கும் வகையில், இந்த புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதுச்சேரியை அடுத்து காரைக்கால் மற்றும் தமிழக பகுதிகள் என மொத்தம் 9 கடலோர இடங்களில் 1-ஆம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.