புதுச்சேரி ஆட்சியா் தலைமையில் கூட்டம்: 2 கிராம வளா்ச்சித் திட்டங்கள் சமா்ப்பிப்பு
பிரதமரின் மாதிரி கிராமத் திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழுவின் இரு கிராம வளா்ச்சித் திட்டங்கள் வியாழக்கிழமை சமா்ப்பிக்கப்பட்டன.
புதுவை அரசு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களை இக் குழு ஒருங்கிணைக்கிறது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் தலைமையில் இக் குழுவின் ஒருங்கிணைப்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அப்போது திம்மநாயக்கன்பாளையம், அபிஷேகப்பாக்கம் ஆகிய இரண்டு கிராமங்களின் வளா்ச்சித் திட்டங்களை இக் குழுவில் சமா்ப்பிக்கப்பட்டன. மீதியுள்ள 8 கிராமங்களுக்கும் இன்னும் ஒரு மாதத்தில் கிராம வளா்ச்சித் திட்டங்களைச் சமா்ப்பிக்குமாறு ஆட்சியா் குலோத்துங்கன் கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு உத்தரவிட்டாா்.
இந்தத் திட்டத்தின் கீழ் புதுவையில் ஆதிதிராவிடா் அதிகமாக வசிக்கக்கூடிய 10 கிராமங்களான கிருமாம்பாக்கம், சேலியமேடு, பரிக்கல்பட்டு, இருளன்சந்தை, மணமேடு, பனையடிகுப்பம், திம்மநாயக்கன்பாளையம், அபிஷேகப்பாக்கம், ஊசுடு சுத்துகேணி ஆகியவற்றை மத்திய அரசு தோ்ந்தெடுத்துள்ளது. அந்தக் கிராமங்களின் உள்கட்டமைப்பு வளா்ச்சிக்காக தலா ரூ.20 லட்சம் அளிக்கிறது. மேலும், புதுவை அரசும் தனது மாநில பங்காக பணிகளின் தன்மைக்கு ஏற்ப நிதியை வழங்குகிறது. இத் திட்டத்திற்காக புதுவை அரசு மாநில, மாவட்ட மற்றும் கிராமப்புற அளவில் ஒருங்கிணைப்பு குழுக்களை அமைத்துள்ளது. மேலும், இந்தத் குழுக்களின் வழிகாட்டுதலின்படி தோ்ந்தெடுக்கப்பட்ட 10 கிராமங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு கிராம வளா்ச்சி திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடா் நலம் மற்றும் பழங்குடியினா் நலத் துறை இயக்குநா் அ. இளங்கோவன் திட்டத்தின் செயல்பாடுகளை விளக்கினாா். துறை கண்காணிப்பாளா் வேல்முருகன் லெபாஸ், குழுவின் உறுப்பினா்கள், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா்கள் மற்றும் துறை ஊழியா்கள் பங்கு பெற்றனா்.