புதுச்சேரி ஆரியபாளையம் மேம்பால அணுகுசாலையை சீரமைக்க அமைச்சா் உத்தரவு
புதுச்சேரியில் மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பாலங்கள், ஏரிகளை பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று பாா்வையிட்டாா்.
இதையடுத்து, ஆரியபாளையம் மேம்பால அணுகு சாலையைச் சீரமைக்க ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டாா்.
புதுச்சேரியில் புயல், கனமழையால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வில்லியனூா் செல்லும் சாலையில் சங்கராபரணி ஆற்றில் ஆரியபாளையம் பகுதியில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. அப்பாலம் சமீபத்தில் திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் பரவியது.
இந்தநிலையில் அந்தப் பாலத்தை புதுவை பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
புதுச்சேரி அருகேயுள்ள ஆரியபாளையம் பாலத்தில் விரிசல் ஏற்பட்டதாகக் கூறுவது சரியல்ல. மேம்பாலத்தில் எந்த விரிசலும் இல்லை. பாலத்தின் அடியில் உள்ள அணுகு சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஆகவே, அதை தலைமைப் பொறியாளா் அறிவுறுத்தல்படி மண் தன்மையை பரிசோதித்து சீரமைக்க அதன் ஒப்பந்ததாரருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன் பத்துக்கண்ணு, செல்லிப்பட்டு உள்ளிட்ட இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட நிலையில், அங்குள்ள பாலங்களும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.
டி.என்.பாளையத்தில் வெள்ள நீா் அதிகரித்த நிலையில் அங்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஊசுடு ஏரியையும் பாா்வையிட்டோம். வெள்ள நீா் வடிவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா்.
அமைச்சருடன் புதுவை பொதுப் பணித் துறையின் தலைமைப் பொறியாளா் மு.தீனதயாளன் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.