பஞ்சாங்கக் குறிப்புகள் - மே 26 முதல் ஜூன் 1 வரை #VikatanPhotoCards
புதுச்சேரி: `பாண்லே நஷ்டத்தில் இயங்குகிறது… பாதி ஊழியர்களை காணவில்லை’ – அப்செட்டான முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரி குருமாம்பேட்டில் இயங்கி வரும் அரசின் பாண்லே நிறுவனத்தில், 20,000 லிட்டர் ஐஸ்கிரீம் உற்பத்திக் கூடம் அமைக்கும் பணியை முதல்வர் ரங்கசாமி அடிக்கல் நாட்டி நேற்று துவக்கி வைத்தார். அப்போது பேசிய முதல்வர் ரங்கசாமி, ``எத்தனை பால் நிறுவனங்கள் வந்தாலும், பாண்லே பாலுக்கு மக்களிடம் எப்போதும் வரவேற்பு இருக்கிறது. `பாண்லே பால் வந்துவிட்டதா ?’ என மக்கள் காத்திருந்து வாங்கிச் செல்கின்றனர்.
அந்த அளவுக்கு மக்கள் பாண்லே மீது நம்பிக்கை வைத்திருக்கின்றனர். அதே நேரம் அதற்கேற்ற உற்பத்தி இல்லை. குஜராத் நிறுவனமான அமுல் இல்லாவிட்டால், பாண்லே நிறுவனம் மிகவும் கீழே சென்றுவிட்டிருக்கும். அமுல் நிறுவனத்துடன் இணைந்து ஐஸ்கிரீம் உற்பத்தி செய்து வருகிறோம். தினமும் 1.20 லட்சம் லிட்டர் பால் தேவைப்படுகிறது. ஆனால் புதுச்சேரியில் 60,000 லிட்டர் பால்தான் உற்பத்தி செய்ய முடிகிறது.

மீதமுள்ள பால் தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வாங்கப்படுகிறது. லாபம் இல்லாததால்தான் கூட்டுறவு நிறுவனங்கள் நஷ்டத்தில் விழுகின்றன. அதனால் ஊழியர்கள் லாபம் ஈட்டுவதில் ஆர்வம் காட்ட வேண்டும். பாண்லேவில் பாதி பேர்தான் வேலை செய்கின்றனர். மீதி பாதி பேர் வேலையே செய்வதில்லை. அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று கூட தெரியவில்லை என்று சொல்கிறார்கள். அதிகாரிகள் மீது ஊழியர்களும், ஊழியர்கள் மீது அதிகாரிகளும் மாறி மாறி குறை சொல்லக் கூடாது.
இதனால் அதிகாரிகளுக்கு நஷ்டம் இல்லை. ஊழியர்களுக்குத்தான் வேலை இல்லாமல் போகும். லாபத்தில் இயங்கி வந்த பாண்லே, தற்போது ரூ.27 கோடி நஷ்டத்தில் இயங்குகிறது. இன்னும் 10 நாட்களுக்குப் பிறகு கேட்டால் ரூ.30 கோடி நஷ்டத்தில் இயங்குகிறது என்பார்கள். ஊழியர்கள் லாபம் ஈட்டினால்தான் அவர்களுக்கு சம்பளம் கிடைக்கும். நிறுவனம் சரிந்துவிட்டால் அதை மீண்டும் நிமிர்த்துவது சிரமம்” என்றார்.