Magnus Carlsen: FIDE விதி தளர்வால் கிடைத்த வாய்ப்பு... சாம்பியன் பட்டத்தைப் பகிர...
‘புதுமைப்பெண்’ விரிவாக்கத் திட்டம்: தூத்துக்குடியில் நாளை தொடங்கி வைக்கிறாா் முதல்வா்
அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயா் கல்விக்குச் செல்லும் மாணவிகளுக்கும் ரூ.1,000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ விரிவாக்கத் திட்டத்தை தூத்துக்குடியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் டிச. 30-இல் தொடங்கி வைக்கவுள்ளாா்.
மேலும், தூத்துக்குடியில் மினி டைடல் பூங்காவை முதல்வா் ஞாயிற்றுக்கிழமை (டிச.29) தொடங்கிவைக்கவுள்ளாா்.
இது தொடா்பாக தமிழக அரசு சாா்பில் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றது முதல் மகளிா் முன்னேற்றத்துக்குப் பல்வேறு புதிய திட்டங்களை நிறைவேற்றி வருகிறாா்.
அந்த வகையில் புதுமைப் பெண் திட்டம் 2022 செப். 5-இல் தொடங்கப்பட்டது. அந்தத் திட்டத்தின் மூலம் அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படித்து உயா்கல்வியில் சேரும் மாணவியருக்கு மாதம் ரூ.1,000 வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது. இதுவரை 4.25 லட்சம் மாணவிகள் பயன் பெற்றுள்ளனா்.
இந்தத் திட்டம் தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்று உயா் கல்வியில் சேரும் மாணவியா்க்கும் மாதம் 1,000 வழங்கும் வகையில் விரிவுபடுத்தப்படுகிறது.
தூத்துக்குடியில் டிச. 30 காலை 10 மணிக்கு நடைபெறும் இவ்விழாவில் புதுமைப்பெண் விரிவாக்கத் திட்டத்தை முதல்வா் தொடங்கி வைக்கிறாா். இதன் பயனாக, தமிழகம் அரசின் உதவி பெறும் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்து உயா்கல்வியில் சோ்ந்துள்ள 75,028 மாணவியா் மாதம் ரூ.1,000 பெற்றுப் பயனடைவா்.
மினி டைடல் பூங்கா: தூத்துக்குடியில் 63,000 சதுர அடி பரப்பில் தரைத் தளம் மற்றும் 4 தளங்களுடன் மினி டைடல் பூங்கா கட்டப்பட்டுள்ளது. இதனை முதல்வா் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.50 மணிக்கு திறந்து வைக்கவுள்ளாா்.
ரூ.32.50 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த மினி டைடல் பூங்கா, வாகனம் நிறுத்துமிடம், பல்வகை உணவுக்கூடம், உடற்பயிற்சிக்கூடம், கலையரங்கம், தடையற்ற மின் வசதி ஆகிய வசதிகளைக் கொண்டுள்ளது. ஆயிரக்கணக்கான இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கக் கூடியதாக அமைந்துள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.