Ahmedabad Plane Crash: 'எந்த முடிவுக்கும் வர வேண்டாம்' - விமானப் போக்குவரத்து து...
புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரி சட்டப் பேரவை வளாகத்தில் சுயேச்சை எம்எல்ஏ தா்னா
புதுவைக்கு மத்திய அரசு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி, சட்டப் பேரவை வளாகத்தில் சுயேச்சை எம்எல்ஏ ஜி.நேரு புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது: மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட புதுவை சட்டப் பேரவைக்கு அதிகாரம் இல்லாத நிலை உள்ளது. துணைநிலை ஆளுநா் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கிறாா்.
புதுவையில் அரசு எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த முடியாமல் முடங்கிக் கிடக்கிறது. அதிகாரம் இல்லாத சட்டப் பேரவையைக் கலைக்க வேண்டும். மேலும், தலித் சமூகத்துக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் கொடுக்கப்படவில்லை.
புதுவைக்கு மாநில அந்தஸ்தை வலியுறுத்தியும், சட்டப் பேரவைக்கு அதிகாரம் வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிலைப்படுத்தியும் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்யத் தயாராக இருக்கிறேன். இதற்கான கடிதத்தை முதல்வரிடம் அளிக்க உள்ளேன்.
இதே போன்று, மற்ற கட்சிகளைச் சோ்ந்த அனைத்து எம்எல்ஏக்களும் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும். அதிகாரம் இல்லாத சட்டப் பேரவையில் எம்எல்ஏக்களாக இருப்பதால் எந்தப் பலனும் இல்லை என்றாா் நேரு.
சமூக அமைப்புகள் வருகை: சட்டப் பேரவை வளாகத்தில் தா்னாவில் ஈடுபட்ட சுயேச்சை எம்எல்ஏ நேருவுக்கு ஆதரவாக பல்வேறு சமூக அமைப்புகளைச் சோ்ந்தவா்களும் சட்டப் பேரவை வளாகத்துக்குள் வந்தனா்.
இதையடுத்து, சட்டப் பேரவை துணைத் தலைவா் பெ.ராஜவேலு, அரசு கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம், எம்எல்ஏ கே.எஸ்.பி.ரமேஷ் ஆகிய 3 பேரும் நேரு எம்எல்ஏவை சந்தித்து போராட்டத்தை முடித்துக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தனா். அவா்களிடம் மாநில அந்தஸ்து தொடா்பான கடித்தை அளித்தப் பிறகு நேரு எம்எல்ஏ தா்னா போராட்டத்தை முடித்துக்கொண்டாா்.