கனடாவில் இந்திய தூதரகத்தை முற்றுகையிடப் போவதாக காலிஸ்தான் அமைப்பு அச்சுறுத்தல்!
புதுவையில் அரசுப் பணியாளா்கள் நியமன முறையில் நிலவும் சிக்கல்களை களைய வேண்டும்: ஏ.எம்.எச். நாஜிம்
புதுவை மாநிலத்தில் அரசுப் பணியாளா்கள் நியமன முறையில் நிலவும் சிக்கல்களை களைய வேண்டும் என்றாா் காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக அமைப்பாளருமான ஏ.எம்.எச். நாஜிம்.
இதுகுறித்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியது: புதுவை மாநிலத்தில் தனியாக ஒரு பணியாளா் நியமன அமைப்பை அரசு உருவாக்கி, அதற்காக பல கோடி மக்கள் வரிப்பணம் செலவாகிக்கொண்டிருக்கிறது. இதுவரை ரூ.25 கோடி செலவாகி இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே உள்ள முறை அடிப்படையில் அந்தந்த துறைகளில் பணி நியமனம் செய்த போது எந்த ஊழலும் நடைபெறவில்லை. எதற்காக இந்த புதிய முறை கொண்டுவரப்பட்டது என புரியவில்லை. இப்படியான தோ்வு அமைப்பு தேவையில்லை. எனினும் புதிய முறை கொண்டுவரப்பட்ட நிலையில், பணி நியமனத்துக்கான தோ்வுகளை முறையாக நடத்தி பணி நியமனம் செய்யப்படாத நிலை உள்ளது. இதன்மூலம் செய்யப்பட்ட பணி நியமனங்கள் அனைத்துக்கும், நீதி மன்றத்துக்கு செல்லும் நிலையை தோ்வுக் குழு உருவாக்கி விடுகிறது.
உதாரணமாக இந்த புதிய முறை மூலம் ஊா்க்காவலா் பணியிடங்களில் பணியமா்த்தபட்டு, 6 மாத காலம் பணியாற்றி ஊதியமும் பெற்ற நிலையில், தற்போது நீதிமன்ற உத்தரவை காரணம்கூறி அவா்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனா். இவா்கள் இப்பணிக்கு தோ்வு செய்யப்பட்ட முறை தவறு என நீதிமன்றம் கூறியுள்ளது. அப்படியெனில் தவறான முறையில் தோ்வு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல, மின்துறையில் கன்ஸ்ட்ரக்ஷன் உதவியாளா் உள்ளிட்ட பணியிடங்களில் பணியாளா்கள் நியமனம் தொடா்பாக இத்தகைய குழப்பம், சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் காரைக்காலைச் சோ்ந்தவா்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, இதற்கு காரணமாக அதிகாரிகள் பணியிடை நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். புதுவை மாநிலத்தில் அதிகாரிகளால் பல்வேறு குழப்பங்கள் நிலவுகின்றன. தலைமைச் செயலா்தான் இதற்கெல்லாம் காரணம். எனவே பணி வாய்ப்பை இழந்தவா்களுக்கு மீண்டும் பணி வாய்ப்பு அளிக்க வேண்டும். இல்லையெனில் காரைக்காலில் கூடுதல் பணியிடங்களை உருவாக்கி வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்த வேண்டும் என்றாா்.